செய்திகள்

கார்ப்பரேட் முதலாளிகளுக்காக பாடுபடும் மோடியை ரஜினி பாராட்டுவதா?- திருமாவளவன் கண்டனம்

Published On 2018-12-03 05:24 GMT   |   Update On 2018-12-03 05:24 GMT
கார்ப்பரேட் முதலாளிகளுக்காக பாடுபடும் மோடியை பாராட்டுவதா? என்று ரஜினிக்கு திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். #Rajinikanth #Thirumavalavan #Modi
சென்னை:

பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டி நடிகர் ரஜினிகாந்த் ஆங்கில பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்து இருந்தார். மோடி நாட்டிற்கு நல்லது செய்ய கடினமாக உழைப்பதாக அவர் குறிப்பிட்டு இருந்தார்.

அதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பதில் அளித்து கூறி இருப்பதாவது:-

மோடி தலைமையிலான பா.ஜனதா ஆட்சியில் மக்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள். கருப்பு பணத்தை ஒழிக்க மோடி எடுத்த நடவடிக்கை மூலம் ஏழை-எளிய நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டார்களே தவிர கருப்பு பணம் ஒழியவில்லை.

ஊழலும் ஓழிக்கப்படவில்லை. நாட்டு மக்களின் வறுமையும் குறையவில்லை. சமுதாயத்தில் சாதி, மத மோதல்கள் அதிகரித்துள்ளன. மதவெறியர்களின் தாக்குதல் அதிகரித்துள்ளது.


கார்ப்பரேட் முதலாளிகளின் நலன் காக்கத்தான் மோடி அடிக்கடி வெளிநாடுகளுக்கு பயணம் செய்கிறார். அவர்களுக்காகத்தான் மோடி ஓடி ஓடி உழைக்கிறார். ஏழை-எளிய அடித்தட்டு மக்கள் நலனுக்காக அவர் உழைக்கவில்லை என்பது நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும்.

ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சிகளை ஒருங்கிணைக்கவே 7 பேர் விடுதலையை வலியுறுத்தி ம.தி.மு.க. நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏற்கனவே நாங்கள் ஒருங்கிணைந்துதான் இருக்கிறோம். காவிரி பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் ஒருங்கிணைந்து போராடி வருகிறோம்.

நாங்கள் ஒருங்கிணையக் கூடாது என நினைப்பவர்கள் வேண்டும் என்றே தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள். எங்கள் கூட்டணியில் எந்தவிதமான குழப்பமும் இல்லை. நாங்கள் தி.மு.க. கூட்டணியில்தான் இருக்கிறோம்.

இவ்வாறு திருமாவளவன் கூறினார். #Rajinikanth #Thirumavalavan #Modi
Tags:    

Similar News