செய்திகள்
அமராவதி அணை

அமராவதி-திருமூர்த்தி அணைகளில் நீர் மின் உற்பத்தி தீவிரம்

Published On 2021-09-11 08:43 GMT   |   Update On 2021-09-11 08:43 GMT
திருமூர்த்தி அணையில் இருந்து 4ம் மண்டல பாசனத்திற்கு ஆகஸ்ட் 6-ந்தேதி முதல் தண்ணீர் திறக்கப்படுகிறது.
உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணை மற்றும் திருமூர்த்தி அணைகளை ஆதாரமாகக்கொண்டு மின் உற்பத்தி மேற்கொள்ளும் சிறு புனல் மின்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அமராவதி அணையில் 4 மெகாவாட் திறனுள்ள எந்திரங்கள் வாயிலாக உற்பத்தியாகும் மின்சாரம் அமராவதி நகர், கிளுவன் காட்டூர் துணை மின் நிலையம் வழியாக மின் வினியோகத்திற்கு செல்கிறது.

அதேபோல்  திருமூர்த்தி அணையில் 2 மெகாவாட் திறனுள்ள எந்திரங்கள் வழியாக உற்பத்தியாகும் மின்சாரம்  திருமூர்த்திநகர், தளி பீடர் வழியாக பூலாங்கிணர் துணை மின் நிலையத்திற்கு வருகிறது. அமராவதி அணையில் இருந்து மே மாதம்16-ந்தேதி முதல் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு இரு மாதமாக உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

அதேபோல் திருமூர்த்தி அணையில் இருந்து 4ம் மண்டல பாசனத்திற்கு  ஆகஸ்ட்  6&ந்தேதி முதல் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் இரு சிறு புனல் மின் உற்பத்தி நிலையங்கள் வாயிலாக மின் உற்பத்தி நடந்து வருகிறது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், தென்மேற்கு பருவ மழையால் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் திருப்தியான நீர் இருப்பு உள்ளதோடு உபரியாகவும், பாசனத்திற்கும் தொடர்ந்து நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால், நீர் உற்பத்தி தொடர்ந்து நடந்து வருகிறது.

ஒரு மெகாவாட் திறனுள்ள எந்திரம் வாயிலாக சராசரியாக மணிக்கு 1,600 யூனிட் என  நாள் ஒன்றுக்கு 96 ஆயிரம் யூனிட் வரை மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது. அணைகளில் நீர் வெளியேற்றத்தை பொருத்து சிறு புனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி உள்ளது என்றனர்.
Tags:    

Similar News