ஆன்மிகம்
பரமபதநாதர் சன்னதியில் உள்ள கண்ணாடி அறை

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் 4 லட்சம் பக்தர்கள் தரிசனம்

Published On 2020-01-11 05:46 GMT   |   Update On 2020-01-11 05:46 GMT
வைகுண்ட ஏகாதசி விழாவில் 5 நாட்களில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் 4 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பூலோக வைகுண்டம் எனவும், 108 வைணவ தலங்களில் முதன்மையானதும் எனவும் அழைக்கப்படுகிறது. இக்கோவிலில் ஆண்டு முழுவதும் விழாக்கள் நடைபெறுவது சிறப்பாகும்.

கோவிலில் சாமி தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமில்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் வருகை தருவது உண்டு. அதிலும் குறிப்பாக வைகுண்ட ஏகாதசி விழாவில் ரெங்கநாதரை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது உண்டு.

இந்த நிலையில் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த டிசம்பர் மாதம் 26-ந் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பகல் பத்து நாள் நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான கடந்த 6-ந் தேதி சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. அன்றைய தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து ராப்பத்து நாள் நிகழ்ச்சி நடந்து வருகிறது.

ராப்பது நாள் நிகழ்ச்சியில் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு சொர்க்கவாசலை கடந்து சென்று ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை அளித்து வருகிறார். ராப்பத்து 5-ம் நாள் நிகழ்ச்சியில் நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.

ராப்பத்து நாட்கள் நிகழ்ச்சியில் சொர்க்கவாசல் திறந்திருக்கும் என்பதால் கடந்த 6-ந் தேதி கோவிலுக்கு வர முடியாதவர்கள், தற்போது தரிசனத்திற்கு வந்து செல்கின்றனர். மேலும் சொர்க்கவாசலை கடந்து சென்று வழிபாடு நடத்துகின்றனர். இதனால் தற்போது ராப்பத்து நாட்கள் நிகழ்ச்சியிலும் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் உள்ளது. கடந்த 6-ந் தேதி முதல் நேற்று வரை 5 நாட்களில் 4 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இன்னும் 4 நாட்களில் பக்தர்கள் மேலும் வருகை தரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோவிலில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு திருக்கைத்தல சேவையும், நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மாலை திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. வருகிற 16-ந் தேதி நம்பெருமாள் மோட்சத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெறுகிறது.
Tags:    

Similar News