ஆன்மிகம்
மாரியம்மன்

சீதளாதேவி மகா மாரியம்மன் கோவில்- மன்னார்குடி

Published On 2020-08-17 02:21 GMT   |   Update On 2020-08-17 02:21 GMT
கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடி செல்லும் வழியில் உள்ளது ‘வலங்கைமான்’ என்ற ஊர். இந்த ஊரின் சாலை ஓரத்திலேயே அமைந்துள்ளது, சீதளாதேவி மகா மாரியம்மன் கோவில்
தெய்வங்களிடம் மனிதன் வேண்டுதல் வைப்பதும், அந்த வேண்டுதலுக்குச் செவி சாய்த்து தெய்வங்கள் அதனை நிறைவேற்றித் தருவதும், அந்த நன்றிக்கடனுக்காக தெய்வங்களுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதும், பல நூற்றாண்டு காலமாக நடைபெற்று வரும் வழக்கம்தான். ஆனால் அந்த நேர்த்திக்கடனானது, குழந்தை பிறந்தால் தொட்டில் கட்டுவது, இன்னும் பிற வேண்டுதல்களுக்காக அபிஷேக ஆராதனைச் செலவுகளை ஏற்றுக்கொள்வது, கோவிலுக்கு பொருட்கள் ஏதாவது வாங்கிக்கொடுப்பது, பால்குடம் எடுப்பது, காவடி எடுப்பது என்றுதான் பெரும்பாலும் இருக்கும். ஆனால் உயிரை காத்து அருளிய தெய்வத்துக்கு, பூரணமாக குணமடைந்ததும் பாடை கட்டி அதில் பிணம் போல் படுத்துக் கிடந்து, கோவிலைச் சுற்றி வலம் வந்து செலுத்தும் நேர்த்திக்கடன் கொஞ்சம் அபூர்வமானதுதான்.

கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடி செல்லும் வழியில் உள்ளது ‘வலங்கைமான்’ என்ற ஊர். இந்த ஊரின் சாலை ஓரத்திலேயே அமைந்துள்ளது, சீதளாதேவி மகா மாரியம்மன் கோவில். வலங்கைமான் கிராமத்தின் வடகிழக்கு பகுதியில் இந்த ஆலயம் இருக்கிறது. இந்தக் கோவிலின் அருகிலேயே ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவிலும், பைரவ சித்தர் பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகளின் திருமடமும் உள்ளது. வலங்கைமான் மகாமாரியம்மன், உருவத்தில் சிறியவள்; எளிமையானவள். ஆனால் தன்னை நாடி வருபவர்களுக்கு அருள்புரிவதில் அவளை விட பெரியவர் எவரும் இல்லை என்ற நம்பிக்கையை பக்தர்களிடம் விதைத்திருப்பவள். மாரியம்மன், குழந்தை ரூபத்தில் இந்தத் தலத்தில் அருள்வதாக தல புராணம் சொல்கிறது.

தல வரலாறு

சுமார் 230 ஆண்டுகளுக்கு முன், வலங்கைமான் ஊரின் அருகில் உள்ள அடைக்கலங்காத்த அய்யனார் கோவில் பக்கத்தில் ஒரு குழந்தை கிடந்தது. அந்தக் குழந்தையை வலங்கைமானில் உள்ள ஏழைப் பெண் ஒருத்தி எடுத்து வளர்த்து வந்தாள். இந்த நிலையில் அந்தக் குழந்தை வைசூரி நோயால் பாதிக்கப்பட்டு இறந்து விட்டது. அன்று இரவு ஊர் மக்களின் கனவில் வந்த அந்தக் குழந்தை, “எனக்கு உடல் இல்லையே தவிர உயிர் இருக்கிறது. நான் மாரியம்மன். நான் தான் குழந்தை வடிவில் இங்கு வந்தேன். என்னை வழிபடுபவர்களுக்கு உயிருக்கு அபயம் தந்து காப்பேன்” என்று கூறி மறைந்தது. இதனைக் கேட்டதும் ஊர் மக்கள் குழந்தை சமாதியில் ஆலயம் எழுப்பினர். அன்று குழந்தை வடிவில் வலங்கைமானுக்கு வந்த மாரியம்மனே, இன்று சீதளாதேவி மகா மாரியம்ம னாக இருந்து அருளாட்சி புரிந்து வருகிறாள்.

நான்கு திருக்கரங்களுடன் இடது காலை மடித்து, வலது காலை தொங்கவிட்டபடி வீர சிம்மாசனத்தில் அமர்ந்த நிலையில் கிழக்கு நோக்கி மகா மாரியம்மன் வீற்றிருக்கிறாள். வலது மேற்கரத்தில் உடுக்கையும், வலது கீழ்கரத்தில் கத்தியும், இடது மேற்கரத்தில் சூலமும், இடது கீழ்கரத்தில் கபாலமும் வைத்திருக்கிறாள். அம்மனின் இரு தோள்களிலும் இரண்டு நாகங்கள் உள்ளன. இத்தல மாரியம்மனை தீபமேற்றி வழிபட்டு அர்ச்சித்தால், நாக தோஷங்கள் அகலும் என்பது நம்பிக்கையாக உள்ளது. ஆலயத்தின் உட்பிரகாரத்தில் விநாயகர், இருளன், பேச்சாயி, பொம்மி மற்றும் வெள்ளையம்மாள் உடனாய மதுரைவீரன் சுவாமி சன்னிதிகள் அமைந்துள்ளன. வாய் பேச முடியாத குழந்தைகளை இந்தத் தலத்துக்கு அழைத்து வந்து மாரியம் மனுக்கும், பேச்சாயி அம்மனுக்கும் தனித்தனியாக சர்க்கரைப் பொங்கலிட்டு வழிபட்டால் பேச்சு வரும் என்பது நம்பிக்கை.

‘அபிராமி அந்தாதி’ பாராயணம் செய்து வெள்ளிக்கிழமைகளில் குங்கும அர்ச்சனை செய்துவழிபட்டால் சுபகாரியத்தடைகள் அகலும். உடலில் எந்தப் பகுதியில் நோய் தாக்கம் இருப்பினும், அம்மனை வேண்டிக்கொண்டு அங்கப்பிரதட்சணம் வருவது இந்தத் தலத்தில் தினமும் நிகழும் நிகழ்வுகளில் ஒன்றாக இருக்கிறது. அம்மை நோய் கண்டவர்கள் இங்கு வந்து மூன்று நாட்கள் தங்கியிருந்து மாரியம்மனின் அபி ஷேக பாலையும், வேப் பிலையையும் உண்டு வந்தால் அம்மை நோய் தாக்கம் குறைந்து உடனே குணமாகிவிடும்.

கண் நோய் மற்றும் கண்ணில் குறைபாடு உள்ளவர்கள் அம் மனுக்கு அர்ச்சனை செய்து ஏழு நாட்கள் கோவிலில் தங்கி இருந்து அம்மனின் அபிஷேகப் பாலையும், வேப்பிலையையும் உண்டு வந்தால் கண்பார்வையில் கண்டிப்பாக முன்னேற்றம் காணப்படும் என்கிறார்கள். கண் நோய் குணமானவர்கள் வெள்ளியில் கண்மலர் வாங்கி அம்மனுக்கு சமர்ப்பிக்கலாம். கால் நோய் மற்றும் வாத நோய்களுக்கு கோவிலில் தரும் எலுமிச்சை சாறு, வேப்பிலை, குங்குமம் மூன்றையும் குழைத்து தடவி வந்தால் நோய் விரைவில் குணமடையும்.

உயிருக்கு போராடுபவர்கள், மருத்துவர்களால் கைவிடப்பட்டவர்கள், தீராத நோய்களால் உயிர் பயத்தில் அவதியுறுபவர்கள் இத்தலம் வந்து அம்மனை வேண்டிக் கொள்ள வேண்டும். அல்லது நோயாளிகளின் உறவினர்கள் இங்குவந்து அம்மனிடம் உயிர் காக்க வேண்டி, அம்பாளிடம் ‘பாடை காவடி நேர்ச்சை’ செலுத்துவதாக வேண்டிக் கொண்டால், அம்மன் நிச்சயம் உயிரை காத்துக் கொடுப்பாள் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. இந்த நேர்த்திக்கடனை ஆலயத்தில் பங்குனி மாதத்தில் நடைபெறும் பெருவிழாவின் போது செலுத்த வேண்டும்.

அமைவிடம்

கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடி செல்லும் வழி யில் 9 கிலோமீட்டர் தொலை வில் வலங்கைமான் அமைந்துள்ளது. இங்குள்ள சீதளாதேவி மகா மாரியம்மன் கோவில் அருகில்தான், மிகவும் பழமையான வலங்கைமான் பெரியநாயகி உடனாய கயிலாசநாதர் திருக்கோவில் இருக்கிறது. பொதுவாக சிவபெருமானின் இடக்கரத்தில் மான் இருக்கும். ஆனால் இங்கு சிவபெருமானின் வலக்கரத்தில் மான் உள்ளதாம். இதனால் ‘வலக் கை மான்’ என்று அழைக்கப்பட்ட இந்த ஊர், நாளடைவில் ‘வலங்கைமான்’ என்றானது.

போலீசாரின் மண்டகப்படி

இந்த ஆலயத்தில் நடைபெறும் பங்குனி மாத பெருவிழாவின் போது, வலங்கைமான் போலீஸ் நிலையத்தில் இருந்து ஒரு நாள் மண்டகப்படி வழங்கப்படுகிறது. அதற்கு ஒரு காரணக் கதையும் சொல்லப்படுகிறது. அதாவது, வலங்கைமான் காவல் நிலையத்தில் 1942-ம் ஆண்டு ஒரு போலீஸ் அதிகாரி பொறுப்பேற்றார். அந்தச் சமயத்தில் பங்குனித் திருவிழா நடைபெற்று வந்தது. திருவிழாவின் போது பாடைக் காவடி மற்றும் அலகு காவடி போன்றவை எடுக்க அந்த அதிகாரி தடைவிதித்தார். அதோடு பக்தர்களை துர்வார்த்தைகளால் திட்டியும், கைத்தடியால் அடித்தும் விரட்டினார். அப்படி அவர் செய்த சில மணி நேரத்திலேயே அவரின் இரண்டு கண் பார்வையும் பறிபோனது. அம்மை நோயும் அவரது உடலை பாதித்தது.

இத்தல அன்னையின் கோபத்தால்தான் இப்படி நேர்ந்தது என்பதை உணர்ந்த அந்த போலீஸ் அதிகாரி, ஒரு பேப்பரில் ‘இனிமேல் எந்த அதிகாரியும் என்போல் பாடை கட்டி விழாவுக்கும், இறை காரியத்திற்கும் தடையாக இருக்காதீர்கள்’ என்று எழுதி கையெழுத்திட்டார். அன்று முதல் வலங்கைமான் போலீஸ் நிலையத்தில் இருந்து பங்குனி மாத திருவிழாவின் போது ஒரு நாள் மண்டகப்படி கொடுக்கும் நிகழ்வு இன்றளவும் நடைபெற்று வருகிறது.
Tags:    

Similar News