செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

அய்யா வைகுண்டர் அவதார தின விழா- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

Published On 2021-03-03 15:06 GMT   |   Update On 2021-03-03 15:06 GMT
சாதி, மத பேதங்கள் அதிகம் உள்ள காலத்தில் சாதி, சமய பேதமின்றி சமத்துவத்தையும், தர்மத்தையும் போதித்தவர் அய்யா வைகுண்டர்.
சென்னை: 

சாமிதோப்பு அய்யா வைகுண்டரின் 189-வது அவதார தினத்தை முன்னிட்டு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

சாமிதோப்பு அய்யா வைகுண்டரின் அவதார தினத்தையொட்டி ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் 20ஆம் தேதி அவதார தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் நாளை (4-3-2021) அய்யாவின் 189-வது அவதார தினம் கொண்டாடப்படுவதை அறிந்து நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

சாதாரண மனிதராக திருச்சம்பதியில் அவதரித்து, மூன்று நாட்கள் கடலுக்குள் இருந்து, விஷ்ணு மகாலெட்சுமியின் அருளோடு, வைகுண்டர் என்ற திருநாமம் பெற்று மக்களுக்கு அருள்புரிய வந்த தினமே அய்யா வைகுண்டர் அவதார தினம் என கொண்டாடப்படுகிறது.

சாதி, மத பேதங்கள் அதிகம் உள்ள காலத்தில் சாதி, சமய பேதமின்றி சமத்துவத்தையும், தர்மத்தையும் போதித்த அய்யா வைகுண்டரின் அருள் மொழிகள் அவனி எங்கும் பரவிற்று. அய்யா வைகுண்டரின் அவதார தினத்தை முன்னிட்டு, அய்யாவின் வழி மக்கள், பாதயாத்திரையாக பல்வேறு ஊர்களில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சாமிதோப்புக்கு வந்து அய்யாவின் அருளைப் பெற வாழ்த்துகிறேன்.

அய்யா வைகுண்டரின் போதனைகளை நாமும் பின்பற்றி அவரது அவதார திருநாள் விழாவில் கலந்துகொண்டு அருள் பெற வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார். 

அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு நாளை (வியாழக்கிழமை) உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News