செய்திகள்
ஜல்லிக்கட்டு போட்டியை முதலமைச்சர், துணை முதலமைச்சர் தொடங்கி வைத்தனர்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி: எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தனர்

Published On 2021-01-16 03:16 GMT   |   Update On 2021-01-16 03:16 GMT
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தனர்.
மதுரை:

பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி, பொங்கல் பண்டிகையான நேற்று முன்தினம் மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நடைபெற்றது. நேற்று 15-ந்தேதி மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.

இன்று மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு விழாவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.



அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 700 மாடுகளும் 650 மாடுபிடி வீரர்களும் பங்கேற்கின்றனர். அலங்காநல்லூரில் முனியாண்டி கோவில் காளைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்  மரியாதை செலுத்தினர். ஜல்லிக்கட்டு போட்டியையொட்டி மதுரை கலெக்டர் அன்பழகன் உறுதிமொழியை வாசிக்க மாடுபிடி வீரர்கள், முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஏற்றனர்.

அதன்பின்னர் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். முதலில் வாடிவாசலில் இருந்து கோவில் காளை சீறிப்பாய்ந்தது.

இந்த ஆண்டு கொரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன், அரசு வகுத்து தந்துள்ள விதிகளின்படி ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

இந்த போட்டியில் கலந்து கொள்ளும் மாடுபிடி வீரர்கள், மாடுகளின் உரிமையாளர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, கொரோனா இல்லை என்று உறுதி செய்யப்பட்டவர்கள் மட்டுமே போட்டிக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

ஜல்லிக்கட்டு போட்டியை காண ஏராளமான பார்வையாளர்கள் வந்துள்ளனர். அவர்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மாடுபிடி வீரர்களுக்கு களத்தில் காயம் ஏற்படக் கூடாது என்பதற்காக தரையில் வைக்கோல்கள் பரப்பப்பட்டுள்ளன. சமூக இடைவெளியுடன் அமரும் வகையில் பார்வையாளர்கள் மாடம் அமைக்கப்பட்டுள்ளது. இருபுறமும் மரக்கட்டைகளால் ஆன தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

Tags:    

Similar News