செய்திகள்
குழந்தை வாங்க வந்ததாக கைது செய்யப்பட்டவர்களை காணலாம்

ஈரோட்டில் கைதான 2 பெண்களுக்கு கருமுட்டை, குழந்தை விற்பனையில் தொடர்பு

Published On 2020-12-10 09:50 GMT   |   Update On 2020-12-10 09:50 GMT
ஈரோட்டில் கைதான 2 பெண்களுக்கு கருமுட்டை, குழந்தை விற்பனையில் தொடர்பு இருப்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஈரோடு:

ஈரோடு, பி.பி.அக்ரஹாரம் ஆரம்ப சுகாதார நிலைகத்தில் நர்சாக பணிபுரிபவர் அகிலா. இவரது செல்போனுக்கு கடந்த 5-ந் தேதி ஒரு அழைப்பு வந்தது.

அதில் பேசிய பெண் ஒருவர் விலைக்கு பச்சிளம் குழந்தை வேண்டும். குழந்தையை வளர்க்க முடியாத நிலையில் இருப்பவர்கள் இருந்தால் தெரிவிக்கலாம். சட்டரீதியான பிரச்சனை வராமல் பார்த்து கொள்ளலாம் என்று கூறி இணைப்பை துண்டித்து விட்டார்.

இதனால் சந்தேகம் அடைந்த நர்ஸ் அகிலா இதுகுறித்து ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் இது குறித்து கருங்கல்பாளையம் போலீசிலும் புகார் அளித்தார்.

போலீசாரின் ஆலோசனைபடி போனில் பேசிய பெண்ணிடம் நர்ஸ் அகிலா போன் செய்து, நீங்கள் கேட்டது போல் குழந்தை உள்ளது. நீங்கள் உடனடியாக பி.பி.அக்ரஹாரம் பகுதிக்கு வருமாறு கூறினார்.

இதை நம்பி 3 பெண்கள் ஒரு ஆண் என 4 பேர் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்களை கருங்கல்பாளையம் போலீசார் பிடித்து விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

விசாரணையில் அவர்கள் கோவையை சேர்ந்த சங்கரேஸ்வரி(வயது30). சேலம் களரம்பட்டியை சேர்ந்த கோகிலா(32), மோகனபிரியா(24), பள்ளிபாளையத்தை சேர்ந்த நந்தகுமார்(32) என தெரிய வந்தது.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் பவானி லட்சுமி நகரை சேர்ந்த சண்முகபிரியாவுக்காக தான் குழந்தையை கேட்டதாக கூறினர். இதுகுறித்து விசாரணை நடத்த போலீசார் பவானிக்கு சென்றனர்.

ஆனால் அதற்குள் சண்முகபிரியா தலைமறைவாகி விட்டார். போலீசார் விசாரணையில் அவருக்கு ஏற்கனவே 14 வயது பெண் குழந்தை இருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து போலீசார் கூறும்போது,

பிடிபட்டுள்ள மோகன பிரியா, கோகிலா ஆகியோர் தங்களது கருமுட்டைகளை ஆஸ்பத்திரியில் அதிக விலைக்கு விற்று பணம் சம்பாதித்து உள்ளனர். மேலும் பச்சிளம் குழந்தைகளை வாங்கி விற்கும் இடைத்தரகர்களாவும் செயல்பட்டுள்ளனர்.

இதில் நந்தகுமார், சங்கரேஸ்வரி இருவரும் இடைத்தரகராக செயல்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். தற்போது சண்முக பிரியா தலைமறைவாக உள்ளார். அவர் பிடிபட்டால் தான் இந்த கும்பலுக்கு வேறு யாருடன் தொடர்பு உள்ளது போன்ற முழு விவரமும் தெரிய வரும்.

தலைமறைவாக உள்ள சண்முக பிரியாவை பிடிக்க கருங்கல்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது 4 பேரிடமும் தீவிர விசாரணை நடந்த வருகிறது. அவர்கள் மீது குழந்தைகளை விற்பனை செய்வது, குழந்தைகளை விற்பனை செய்ய முயற்சித்தல் ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளோம் என்றனர். கைதான 4 பேரையும் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
Tags:    

Similar News