ஆன்மிகம்
திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Published On 2020-11-23 09:00 GMT   |   Update On 2020-11-23 09:00 GMT
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் திருக்கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 28-ந்தேதி(சனிக்கிழமை) கோவிலுக்குள் உள்ள ஆறு கால் மண்டபத்தில் முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகை தீப திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டிற்கான திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. இதனையொட்டி கோவிலுக்குள் உள்ள உற்சவர் சன்னதியில் தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமிக்கு, புத்தம் புதிய பட்டு ஆடை சாத்துபடி செய்து, தங்கம், பவளம், வைடூரியம் போன்ற நகை அணிகலன்களால் அலங்காரம் செய்யப்பட்டது. இதனையடுத்து மேளதாளங்கள் முழங்க உற்சவர் சன்னதியில் இருந்து கம்பத்தடி மண்டபத்திற்கு தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளினார்.

காலை 7.45 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. இதனைதொடர்ந்து தங்கமுலாம் பூசப்பட்ட கொடிமரத்தின் உயரத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு தீப ஆராதனை நடந்தது. திருவிழாவையொட்டி தினமும் காலையிலும், இரவிலுமாக தெய்வானையுடன் முருகப்பெருமான் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நகர் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம். ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சாமி நகர் உலா வருவது ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதேசமயம் கோவிலுக்குள் சாமி புறப்பாடு நடக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 28-ந்தேதி(சனிக்கிழமை) மாலை 6.30 மணி முதல் இரவு 7 மணிக்குள் கோவிலுக்குள் உள்ள ஆறு கால் மண்டபத்தில் முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 29-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) வழக்கம்போல மலையில் உச்சிப்பிள்ளையார் கோவில் வளாகத்தில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதற்காக மூன்றரை அடி உயரமும் இரண்டரை அடிஅகலமும் கொண்ட தாமிர கொப்பரை, 350 லிட்டர் நெய், 100 மீட்டர் கடா துணியிலான திரி, 5 கிலோ கற்பூரம் ஆகியவற்றை கோவில் நிர்வாகம் தயார் செய்து வருகிறது. பக்தர்கள் தங்கள் நேர்த்திக்காக கோவில் அலுவலகத்தில் நெய் வழங்கலாம். 30-ந்தேதி தீர்த்த உற்சவம் நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையரும், தக்காருமான செல்லத்துரை, கோவில் துணை கமிஷனர் (பொறுப்பு) ராமசாமி மற்றும் சிவாச்சாரியார்கள், கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News