லைஃப்ஸ்டைல்
‘முதல் உதவி’ செய்வது தான் வாழ்க்கையில் மிக முக்கியமானது

‘முதல் உதவி’ செய்வது தான் வாழ்க்கையில் மிக முக்கியமானது

Published On 2021-09-14 08:30 GMT   |   Update On 2021-09-14 08:30 GMT
உங்கள் வீட்டில் முதல் உதவி பெட்டியை அமைத்து மேற்கொண்ட பொருட்களை அதில் வாங்கிவையுங்கள். அவைகளை எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா?
சாதாரண காயம் முதல்-உயிருக்கு ஆபத்தான விபத்துக்கள் வரை அனைத்துக்குமே முதல் உதவி அவசியம். அந்த முதல் உதவிக்கு தேவையான மருந்துபொருட்களை பாதுகாப்பாக வைத்திருக்கும் பெட்டிக்குதான் முதலுதவி பெட்டி என்று பெயர். இந்த பெட்டி அனைத்து வீடுகளிலும், அலுவலகங்களிலும் இருக்கவேண்டும்.

முதலுதவி பெட்டியில் ஒரு ஜோடி சுத்தமான கையுறைகள், டிஸ்போசபிள் பேஸ் மாஸ்க், ஸ்டெரிலைஸ்டு காட்டன் ரோல், ஸ்டெரிலைஸ்டு டிரஸ்சிங் துணி, ரோலர் பேண்டேஜ், நுண்ணிய துளைகள் கொண்ட ஒட்டக்கூடிய மருத்துவ டேப், தரமான ஆன்டிசெப்டிக் லோஷன், ஆயின்மெண்ட், துரு இல்லாத கத்தரிக்கோல், குளுக்கோஸ், எலெக்ட்ரால் போன்ற நீர்ச்சத்துக்கான பவுடர் பாக்கெட்டுகள், பாரசிட்டமால் மாத்திரை, வலி நீக்கும் மாத்திரை மற்றும் அவரவர் உடல் நிலையை பொறுத்து ரத்த அழுத்தத்துக்கான மாத்திரை போன்ற பொருட்கள் இருக்கவேண்டும்.

உங்கள் வீட்டில் முதல் உதவி பெட்டியை அமைத்து மேற்கொண்ட பொருட்களை அதில் வாங்கிவையுங்கள். அவைகளை எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா?

காயமடைந்தவருக்கு உதவுவதாக நினைத்துக்கொண்டு, உங்களை அறியாமலே அவருக்கு கூடுதல் வலியை கொடுத்து விடக்கூடாது. உதாரணமாக இருசக்கர வாகன விபத்தில் அடிபட்டவரின் தலைக்கவசத்தை கழற்றும்போது கூட, மிக கவனமாக இருக்கவேண்டும். ஏனெனில் அவர் கழுத்தில் அடிபட்டிருக்கலாம். அது தெரியாமல் அவசரமாக கழற்றினால், அந்த பாதிப்பு அதிகரித்துவிடக்கூடும். அதனால் ஒவ்வொரு உதவியையும் மிக கவனமாக செய்யவேண்டும்.

உயரமான கட்டிடத்தில் இருந்து ஒருவர் கீழே விழுந்து விட்டால், அவரை தூக்கும்போது கழுத்து பகுதியை அசையாமல் அப்படியே தாங்கலாக பிடித்து மெதுவாக கொண்டு போக வேண்டும்.

நெருக்கடியான நேரங்களில் சமயோசித அறிவும், பொது அறிவும் வேலை செய்யவேண்டும். சம்பவம் நடந்த அந்த இடத்தில் உடனடியாக கிடைக்கக் கூடிய அல்லது இருக்கக்கூடிய வசதிகளை வைத்து உடனே உதவுவதே சமயோசிதம், விவேகம்.

குழந்தைகள் விளையாடும்போது கீழே விழுந்து சிறிய அளவில் காயம் ஏற்பட்டால், உடனே காயம்பட்ட இடத்தை சுத்தமான நீரால் கழுவவேண்டும். சோப் போட்டு கூட கழுவி சுத்தப்படுத்தலாம். காயத்தில் இருந்து ரத்தம் அதிகம் வந்தால் சுத்தமான துணியால் அழுத்தி கட்டு போடவேண்டும். பவுடர், சந்தனம், மஞ்சள், காப்பித்தூள் என்று எந்த பொருளையும் காயத்தின் மீது வைக்கக்கூடாது. அது தவறு. காயம் பெரி தாகிவிடும்.

டெட்டனஸ் டெக்ஸாய்டு (டி.டி) தடுப்பூசி ஏற்கனவே போட்டிருந்தால் காயத்துக்கு என்று தனியாக ஊசி போடவேண்டிய தேவையில்லை. 10 வருடங்களுக்கு ஒரு முறை டி.டி. ஊசி போட்டால் போதுமானது.

முதல் உதவி அளித்ததும், பாதிக்கப்பட்டவரை உடனே ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல வேண்டும்.

பிளேடு அல்லது கத்தியால் வெட்டி ரத்தக் கசிவு ஏற்பட்டால், ரத்தம் வரும் பகுதியில் சுத்தமான துணியை வைத்து அழுத்தி ரத்தத்தை கட்டுப்படுத்த வேண்டும்.

ரத்தம் மூக்கில் இருந்து வந்தால், அவரை முன் நோக்கி குனிய செய்து மூக்கின் முன் பகுதியை விரல்களால் பிடித்து கொண்டு, வாயால் மூச்சு விடச்செய்ய வேண்டும். மூக்கில் இருந்து வரும் ரத்தத்தை விழுங்கி விடக்கூடாது. தலையை பின்பக்கமாக சாய்த்து விடக்கூடாது. அப்படி சாய்த்தால் ரத்தம் வாய்க்குள் சென்று நுரையீரலில் புகுந்து விடும். எனவே நிமிரவும், மூக்கு சீந்தவும் கூடாது.

காதில் இருந்து ரத்தம் கசிந்தால், சுத்தமான துணியை வைத்து ரத்தத்தை நிறுத்த வேண்டும். காதுக்குள் எதையும் போட்டு சுழற்றக்கூடாது.

கை, கால் விரல் போன்ற உறுப்புகள் விபத்தில் துண்டிக்கப்பட்டு விட்டால், உடனே அந்த உறுப்பை சுத்தமான ஈரத்துணியில் சுற்றி, ஒரு பாலித்தீன் கவரில் போட்டு அதை ஐஸ் கட்டிகள் நிரம்பிய பெட்டியில் போட்டு உடனே ஆஸ்பத்திரிக்கு பாதிக்கப்பட்டவருடன் எடுத்து செல்ல வேண்டும்.

துண்டிக்கப்பட்ட உறுப்பை நேரடியாக ஐஸ் பெட்டிக்குள் போடக்கூடாது. சுற்றிலும் ஐஸ் இருக்கும் பையில் வைத்து, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு விரைவில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லவேண்டும்.

காதுக்குள் ஏதாவது பொருள் விழுந்து விட்டால் எடுக்க முயற்சிக்க வேண்டாம். உடனே டாக்டரிடம் கொண்டு செல்வது நல்லது.

காதுக்குள் ஏதேனும் பூச்சி போய்விட்டால், டர்பன்டைன் எண்ணெய் சில துளிகள் விடலாம். பூச்சி உடனே இறந்து விடும். பிறகு அதுவே வெளியே வரவில்லை எனில், டாக்டரிடம் சென்று எடுத்து விடவேண்டும்.

குழந்தைகள் விளையாடும்போது ஏதேனும் சிறு மணிகள் அல்லது பயறுகள் மூக்கினுள் போய் விடக்கூடும். அதை எடுக்க முயற்சித்தால் அந்த பொருள் இன்னும் உள்ளே தள்ளி சென்று ஆபத்து நிலைக்கு கொண்டு வந்து விடும். அதனால் உடனே டாக்டரிடம் சென்றுவிட வேண்டும். மூக்கை சீந்த வைக்க கூடாது.

குழந்தைகள் தொண்டையில் ஏதேனும் பொருள் சிக்கி கொண்டால், அதை எடுப்பதற்கு ஹீம்லிக் மெனுவர் என்ற செய்முறை இருக்கிறது. இந்த முதல் உதவி சிகிச்சையை முறைப்படி தெரிந்தவர்கள் அதை பயன்படுத்தி பொருளை எடுக்கலாம். இல்லாவிட்டால் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு செல்வதே சிறந்த வழி.

முதல் உதவி என்பது மிக முக்கியமானது. சரியான நேரத்தில் அதனை செய்து, உயிரைக் காப்பாற்றுவது என்பது மிகப்பெரிய சேவை. அதை செய்ய ஒவ்வொருவரும் தயாராக இருக்க வேண்டும்.
Tags:    

Similar News