செய்திகள்
கூடலூர்-மைசூர் சாலையில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டு, சாலை வெறிச்சோடி கிடப்பதை காணலாம்.

நீலகிரியில் கொரோனா தொற்று அதிகரிப்பு- கூடலூர், பந்தலூரில் அனைத்து கடைகளும் அடைப்பு

Published On 2021-06-10 11:00 GMT   |   Update On 2021-06-10 11:00 GMT
தளர்வுகளற்ற ஊரடங்கு என்பதால் மக்கள் மற்றும் வாகன நடமாட்டம் குறைந்து கூடலூர்-ஊட்டி சாலை, கூடலூர்-மைசூர் சாலைகள் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி கிடக்கிறது.
கூடலூர்:

நீலகிரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது.

தினமும் 450-க்கும் மேற்பட்டோர் தொற்றுக்கு ஆளாகி வருகிறார்கள். மாவட்ட நிர்வாகம் எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக தற்போது சற்று தொற்று குறைந்து வருகிறது. இருப்பினும் கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் தொற்று பாதிப்பு அதிகரித்தபடியே உள்ளது.

இந்த நிலையில் தமிழக அரசு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளித்துள்ளது. அதன்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள் திறக்கப்பட்டது. தற்போது கூடலூர், பந்தலூர் பகுதிகளில் கொரோனா தொற்று அதிகமாக உள்ளதை அடுத்து அங்குள்ள கடைகள் அனைத்தையும் வருகிற 14-ந் தேதி வரை அடைத்து தளர்வுகளற்ற முழு ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் வியாபாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

கூடலூர், பந்தலூர் பகுதிகளில் மளிகை, இறைச்சி, காய்கறி கடைகள் என 550-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. அரசு அளித்த தளர்வின்படி இந்த கடைகள் கடந்த 7-ந் தேதி திறக்கப்பட்டன.

இந்த நிலையில் கூடலூர், பந்தலூர் பகுதிகளில் தொற்று பரவல் அதிகமாக இருந்ததை அடுத்து, கலெக்டர் வேண்டுகோளை ஏற்று, வியாபாரிகள் நேற்று தங்கள் கடைகளை அடைத்தனர்.

இன்று 2-வது நாளாக கூடலூர், நாடுகாணி, பந்தலூர், தேவாலா, பாட்டவயல், சேரம்பாடி, எருமாடு, மசினகுடி உள்பட அனைத்து பகுதிகளிலும் உள்ள மளிகை, காய்கறி கடைகளும் அடைக்கப்பட்டுள்ளது.

கடைகள் மூடப்பட்டுள்ளதால் கூடலூர், பந்தலூர் தாலுகாவில் உள்ள முக்கிய கடைவீதிகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகிறது.

மேலும் தளர்வுகளற்ற ஊரடங்கு என்பதால் மக்கள் மற்றும் வாகன நடமாட்டம் குறைந்து கூடலூர்-ஊட்டி சாலை, கூடலூர்-மைசூர் சாலைகள் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி கிடக்கிறது.

அத்தியாவசிய தேவைகளான மருந்து கடைகள், பாலகங்கள், பெட்ரோல் பங்க்குகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களுக்கு தேவையான காய்கறி, மளிகை பொருட்கள் நடமாடும் வாகனங்கள் மூலம் அவர்களது இருப்பிடங்களுக்கு சென்று விற்பனை செய்யப்படுகிறது.



Tags:    

Similar News