ஆன்மிகம்
பெருமாள் பூஜை

முக்தி தரும் புரட்டாசி சனிக்கிழமை விரதம்

Published On 2021-10-02 02:30 GMT   |   Update On 2021-10-01 07:59 GMT
ஏழுமலையான்,தனக்கு உகந்த மாதம் புரட்டாசி மாதம்தான், அதிலும் சனிக்கிழமைதான் எனக்கு உகந்த நாள் என்கிறார். இதன் பின்னணியில் ஒரு கதை உள்ளது. அந்த கதை வருமாறு:-
மன்னன் தொண்டைமானுக்கு ஏழுமலையான் மீது பற்றும், பாசமும் அதிகம். எனவே திருவேங்கடவனுக்கு ஆலயம் அமைத்து தினமும் பொன்மலர்களால் அர்ச்சனை செய்வதற்குரிய ஏற்பாடுகளை செய்திருந்தான். அதன்படியே பூஜையும் செய்து வந்தான். ஒருநாள் பூஜையின்போது பொன்மலர்களுக்கிடையே மண்மலர்களும் வந்து விழுவதைக் கண்டான். திடுக்கிட்ட அவன், அவை மண்மலர்கள்தானா எனக் கூர்ந்து நோக்கினான்.

அவை மண்மலர்கள்தான் என்பதை மீண்டும் மீண்டும் பூஜையில் வந்து விழுந்த மலர்கள் சந்தேகமேயில்லாமல் நிரூபித்தன. கதவுகள் அனைத்தையும் மூடி விட்டு மன்னன் மீண்டும் பூஜையைத் தொடர்ந்தபோதும் அவ்வாறே நிகழ்ந்தது. மன்னனின் மனம் குழப்பத்துக்கு உள்ளாகியது. தனது வழிபாட்டில் ஏதேனும் பிழை இருக்குமோ என உள்ளுக்குள் வருந்தினான்.

குருவை என்ற கிராமம் ஒன்றில் பீமய்யா என்ற குயவன் ஒருவன் வாழ்ந்து வந்தான். பிறவியிலேயே அவனுக்கு கால் ஊனம். தனது குலத்தொழிலான மண்பாண்டங்கள் செய்தலை நேர்மை தவறாமல் ஏழுமலையான் மீது அயராத பக்தி கொண்டு செய்து வந்தான். வேங்கடவனும் அவன் பக்திக்கு மெச்சி, தன் திருவுருவத்தை அவனுக்கு கனவில் காட்டி பின்பு மறைந்து விட்டார்.

பீமய்யாவுக்கு திருமால் கனவில் காட்சியளித்த நாள், புரட்டாசி மாத சனிக்கிழமை விடியற்காலை நேரம். பீமய்யாவும், தனது கனவில் தோன்றிய திருமாலின் வடிவத்தை அப்படியே செய்தான். அதன்பின்னர் மண்ணால் ஏழுமலையானின் உருவத்தை வடித்து, மலர்கள் தூவி வழிபட்டு வந்தான். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை நாளில் தவறாமல் விரதம் அனுசரித்து வந்த பீமய்யன், பெருமாளின் சிந்தனையிலேயே தொழிலையும் செய்து வந்தான். இவ்விதம் தொழில் செய்து கொண்டிருக்கும் போதே, கண்மூடி தியானத்தில் ஆழ்ந்து விடுவான். அச்சமயங்களில்தான் என்ன செய்கிறோம் என்பதை அறியா நிலையிலேயே, பிசைந்து கொண்டிருக்கும் களி மண்ணையே மலர்களாக பாவித்து பெருமாளுக்கு அர்ச்சிப்பான். காலப்போக்கில் இதுவே அவனது அன்றாட அலுவலாகவும் ஆகி விட்டது. இது இப்படியிருக்க, குழப்பத்திலிருந்த தொண்டைமான் ஒருநாள் அபூர்வக் கனவொன்றைக் கண்டான்.

அக்கனவில் வேங்கடநாதன் தோன்றி, `தமது பக்தன் பீமய்யன் செய்யும் பூஜையே தமக்கு மிகுந்த மனநிறைவை அளிப்பதாகவும், அந்தப் பூஜையை நீயும் செய்து பார், அப்போது உண்மை விளங்கும்‘ என்று கூறி மறைந்தார். தொண்டைமானும் திருமால் குறிப்பிட்ட இடத்துக்கு சென்று பீமய்யன் செய்யப்போகும் பூஜையை மறைந்திருந்து கவனித்தான். தினமும் செய்வது போலவே, பீமய்யன் தான் வடிவமைத்திருந்த வேங்கடவனின் சிலை அருகே அமர்ந்து மண்பாண்டங்களை செய்து கொண்டே, கண்மூடி மண் மலர்களைத் தூவி இறைவனை வழிபடுவதை கண்டான் தொண்டைமன்னன். உடனே பீமய்யனைச் சென்று கட்டித் தழுவிய தொண்டைமான் அவனிடம், `உன் பக்தி உயர்வான பக்தி.

உனது வழிபாட்டைத் திருமால் ஏற்றுக் கொண்டு விட்டார் என்பதை நான் புரிந்து கொண்டேன்’ என்றான். இதற்கிடையில் அந்தப் பரந்தாமன் பீமய்யனின் கனவிலும் தோன்றி, `உன் பக்தி யின் பெருமையை என்று பிறர்கூற அறிகின் றாயோ அன்றே உனக்கு முக்தி அளித்து, வைகுந்தத்துக்கு அழைத்துக் கொள்வேன்’ எனக் கூறியிருந்தார்.

அதன்படியே தொண்டைமான், பீமய்யனின் பக்தியை பாராட்டியதைக் கேட்ட மறுகணமே அவனுக்கு முக்தி கிடைத்தது. எனவே புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து, ஏழுமலையானை மனம் உருக வழிபட்டால், செல்வமும், நிம்மதியும் கிடைக்கும் என்பதோடு, முக்தியும் வாய்க்கும் என்பது ஐதீகம். புரட்டாசி மாத சனிக்கிழமை விரதத்துக்கு இப்படியொரு மகத்துவம் இருக்கிறது.
Tags:    

Similar News