செய்திகள்
போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார்

ரவுடிகள், கட்டபஞ்சாயத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை - போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் பேட்டி

Published On 2021-06-08 18:06 GMT   |   Update On 2021-06-08 18:06 GMT
புதிய போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்த போத்திரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர்.
சிவகங்கை:

திருச்சியில் ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டாக இருந்த செந்தில்குமார் சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார். ஏற்கனவே சிவகங்கையில் பணிபுரிந்த ராஜராஜன் திருநெல்வேலி நகர் துணை கமிஷனராக மாற்றப்பட்டார். இதை தொடர்ந்து செந்தில்குமார் நேற்று சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்றார்.

புதிய போலீஸ் சூப்பிரண்டாக பதவியேற்ற செந்தில்குமாரை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் முரளிதரன், ராஜேந்திரன், வெற்றிசெல்வன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் உதயகுமார், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

சிவகங்கை மாவட்டத்தில் தற்போது கொரோனா பரவலை தடுக்க அரசு அறிவித்த உத்தரவு முழுமையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் குற்றசெயல்களை தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

ரவுடிகள், கட்டபஞ்சாயத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் தங்களுடைய பிரச்சினைகளை எந்த நேரத்திலும் 8608600100 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். அனைத்து புகார்கள் மீதும் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்த போத்திரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.எல். பட்டம் பெற்றவர்.பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தில் சென்னை நகரம் உருவான கதையை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.2001-ம்ஆண்டு குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்ற இவர் உத்தமபாளையம், செங்கல்பட்டு, நன்னிலம், அரக்கோணம் ஆகிய இடங்களில் துணை போலீஸ் சூப்பிரண்டாகவும், பின்னர் அடையாறு சரக உதவி ஆணையாளராகவும், திருவள்ளூர் மாவட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாகவும் பணிபுரிந்துள்ளார்.

பின்னர் பதவி உயர்வு பெற்று சென்னை பூக்கடை உதவி ஆணையாளராகவும் தஞ்சாவூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாகவும் மதுரை நகர் காவல்துணை ஆணையாளராகவும் திருச்சி ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டாகவும் பணிபுரிந்துள்ளார். தமிழ் இலக்கியத்தின் மீது மிகுந்த பற்றுள்ள இவர் எழுத்தாளராகவும் சாதித்து உள்ளார். இவர் பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார். இவரது மனைவி சுதாமதி கண் மருத்துவரான இவர் தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உதவி பேராசிரியராக பணிபுரிகிறார். இவருக்கு செம்மொழிபாரதி என்ற மகளும், திருவாசகம் என்ற மகனும் உள்ளனர்.
Tags:    

Similar News