ஆன்மிகம்
கம்பத்தில் ஊற்ற அடிவாரம் பகுதியை சேர்ந்த பெண்கள் மஞ்சள் நீரை குடங்களில் சுமந்து ஊர்வலமாக சென்ற காட்சி.

பழனி மாரியம்மன் கோவிலில் மாசித்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்

Published On 2021-02-23 06:15 GMT   |   Update On 2021-02-23 06:15 GMT
பழனி மாரியம்மன் கோவிலில் மாசித்திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் அடுத்த மாதம் (மார்ச்) 2-ந்தேதி நடைபெறுகிறது.
பழனி கிழக்கு ரதவீதியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. பழனி முருகன் கோவிலின் உபகோவிலான இந்த கோவிலில் மாசித்திருவிழாவையொட்டி 12-ந்தேதி முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து திருக்கம்பம் சாட்டுதல் கடந்த 16-ந்தேதி நடைபெற்றது. இதற்காக தேக்கந்தோட்டம் பகுதியில் இருந்து கம்பம் வெட்டி எடுத்து வரப்பட்டு நடப்பட்டது. இதையடுத்து தினமும் பக்தர்கள் பால், மஞ்சள்நீர் ஆகியவற்றை கம்பத்தில் ஊற்றி வழிபாடு செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் பழனி மாரியம்மன் கோவிலில் மாசித்திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அப்போது பூவோடு வைத்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து தினமும் அம்மன் வெள்ளியானை, காமதேனு, ரிஷபம் உள்ளிட்ட வாகனங்களில் வீதிஉலா வருகிறார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் அடுத்த மாதம் (மார்ச்) 2-ந்தேதி நடைபெறுகிறது.

அன்று இரவு அம்மன் தங்க குதிரை வாகனத்தில் உலா வருகிறார். தேரோட்டம் 3-ந்தேதி நடைபெறுகிறது. தொடர்ந்து அடுத்த நாள் கொடியிறக்குதலுடன் திருவிழா நிறைவுபெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பழனி கோவில் செயல்அலுவலர் கிராந்திகுமார்பாடி, உதவி ஆணையர் செந்தில்குமார் மற்றும் கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News