செய்திகள்
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு வஞ்சிக்குழி கிராம மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதை படத்தில் காணலாம

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம மக்கள் திடீர் தர்ணா போராட்டம்

Published On 2021-10-14 11:17 GMT   |   Update On 2021-10-14 11:17 GMT
வாக்கு எண்ணிக்கையின் போது வெற்றி, தோல்வியை மாற்றி அறிவித்ததால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர்.
கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை ஒன்றியத்திற்குட்பட்ட வஞ்சிக்குழி ஊராட்சியில் மூலக்காடு உள்பட 7-க்கும் மேற்பட்ட துணை கிராமங்கள் உள்ளன.

இங்கு ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான தேர்தலில் மகேஸ்வரி, சின்னக்கண்ணு உள்பட 4 பேர் போட்டியிட்டனர். இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் நடைபெற்றது. முடிவில் மகேஸ்வரி 25 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவித்ததாக கூறப்படுகிறது.

பின்னர் ஒரு மணி நேரத்துக்கு பிறகு வேட்பாளர் சின்னக்கண்ணு வெற்றி பெற்றதாகவும், மகேஸ்வரி தோல்வியடைந்ததாகவும் தேர்தல் அலுவலர்கள் அறிவித்ததாக கூறப்படுகிறது.

இதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த மகேஸ்வரியின் ஆதரவாளர்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் அதிக வாக்குகள் பெற்ற மகேஸ்வரியை வெற்றி பெற்றதாக அறிவித்து சான்று வழங்கக்கோரி நேற்று இரவு 7 மணியளவில் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றிய தகவல்அறிந்து வந்த கள்ளக்குறிச்சி போலீசார் போராட்டத்தல் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்ததை அடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் தங்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுவினை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதரிடம் கொடுத்து விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

வாக்கு எண்ணிக்கையின்போது வெற்றி, தோல்வியை மாற்றி அறிவித்ததால் ஆத்திரம் அடைந்த வேட்பாளரின் ஆதரவாளர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடத்திய சம்பவத்தால் கள்ளக்குறிச்சியில் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News