லைஃப்ஸ்டைல்
மலத்தில் ரத்தம் கலந்து வருவது இந்த நோயின் அறிகுறியா?

மலத்தில் ரத்தம் கலந்து வருவது இந்த நோயின் அறிகுறியா?

Published On 2020-12-02 06:39 GMT   |   Update On 2020-12-02 06:39 GMT
வாழ்க்கை முறை, உணவு பழக்கவழக்கத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் வயிறு தொடர்பான உறுப்புகளில் புற்றுநோய் வருவதை முன்கூட்டியே தடுக்கலாம்.
மலத்தில் ரத்தம் கலந்து வருவதற்கு 3 காரணங்கள் உண்டு. அவை பைல்ஸ், ஆசன வாயில் உள்ள கிழிசல், புற்றுநோய். ரத்தம் மலத்தில் கலந்து வருவதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. எதையும் அலட்சியமாக கவனிக்காமல் விட்டுவிட்டால், நோய் முற்றி சிகிச்சை அளிப்பதும், குணப்படுத்துவதும் கடினமாகி விடக்கூடும். மலத்தில் ரத்தம் கலந்து வருவது 2 வகைப்படும். ஒன்று கண்ணுக்கே தெரியாது. மற்றொன்று நன்கு தெரியும். சிறிய புண் அல்லது கட்டியில் இருந்து ரத்தம் கசிந்து வருவதால் இது ஏற்படும். கண்ணுக்கு தெரியாவிட்டாலும் அக்கல்ட் பிளட் என்ற பரிசோதனை மூலம் இதை கண்டுபிடிக்கலாம்.

வாழ்க்கை முறை, உணவு பழக்கவழக்கத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் வயிறு தொடர்பான உறுப்புகளில் புற்றுநோய் வருவதை முன்கூட்டியே தடுக்கலாம். பச்சைக் காய்கறி, பழங்களை அதிகம் உட்கொள்ள வேண்டும். சரியான நேரத்தில் உண்ணும் பழக்கம் இருக்க வேண்டும். நடைபயிற்சி அவசியம். எடை கூடாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். தினந்தோறும் மலம் கழிக்கும் பழக்கம் இருக்க வேண்டும். மன அழுத்தம் ஏற்படாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

வயிறு என்பது உணவு சேமிப்பு கிடங்குதான். சிறுகுடலில்தான் செரிமானம் நடைபெறுகிறது. பெருங்குடலோ, உணவு பையோ இல்லாமல் வாழ முடியும். ஆனால், சிறுகுடல் இல்லாமல் வாழ முடியாது. உணவுப் பையில் புற்றுநோய் வந்தால் அதை முழுமையாக நீக்கிவிட்டு, சாதாரண வாழ்க்கை வாழ முடியும். ரத்த வாந்தி அல்லது மலத்தில் ரத்தம் வெளியேறும் நிலையில் குடல் தொடர்பான அவசர சிகிச்சை செய்யப்படும். வாந்தி எடுக்கும்போது சில நேரம் வயிற்றில் இருக்கும் வாயுவால் ரத்தத்தின் நிறம் மாறிக் காபி நிறத்தில் வரும்போது, அப்போது சாப்பிட்ட உணவுதான் வருகிறது என்று தவறாக நினைத்துச் சாதாரணமாக கவனிக்காமல் விட்டுவிடுவார்கள்.

உணவுக் குழாய் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்படும் மாற்றங்களே இத்தகைய வாந்தி, மலத்தில் காணப்படும் நிற மாறுதலுக்குக் காரணம். வயிற்றில் அல்சர் அல்லது புற்றுநோய் இருந்தால் கொஞ்சம் சாப்பிட்ட உடன் வயிறு நிரம்பிவிட்டது போன்ற உணர்வு ஏற்படும். சில நேரங்களில் எரிமலை போல குடலுக்குள் எரியும். உடலில் ஏற்படும் சிறிய மாற்றங்களையும் உடனுக்குடன் கவனித்து, சிகிச்சை பெற்றால் சாதாரண வாழ்க்கை வாழலாம்.
Tags:    

Similar News