உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

செயற்கை இழை ஆடை தயாரிப்பில் கவனம் - உற்பத்தியாளர்களுக்கு அறிவுறுத்தல்

Published On 2022-01-11 06:59 GMT   |   Update On 2022-01-11 06:59 GMT
செயற்கை இழை துணியில் சாயமேற்றுதல், பிரின்டிங் செய்யும் தொழில்நுட்பங்களை மேம்படுத்த வேண்டும்.
திருப்பூர்:

மூலப்பொருள் விலை ஏற்றம் திருப்பூர் பின்னலாடை துறையினரை திணறடித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு தீர்வாக, திருப்பூர் பின்னலாடை துறையினர் செயற்கை இழை ஆடை தயாரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என பின்னலாடை துறை ஆலோசகர் சபரிகிரீஷ் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் கூறியதாவது:

திருப்பூர் தொழில் துறையினர் பருத்தி இழை ஆடை தயாரிப்பை மட்டுமே சார்ந்திருப்பதாலேயே ஏராளமான இன்னல்களை எதிர்கொள்ள நேரிடுகிறது. வர்த்தக போட்டி அதிகரிப்பால் நிறுவனங்களுக்கு கிடைக்கும் லாபம் குறைந்து வருகிறது.

தொழில் முனைவோர் தங்கள் நிறுவனத்தை காலம் கடந்து நிலை நிறுத்தச் செய்வதற்கான முயற்சிகளை இப்போதே மேற்கொள்ள வேண்டும். 

சர்வதேச அளவில் செயற்கை இழை ஆடை தயாரிப்பில் போட்டி நிலை இல்லை. பருத்தி ஆடை தயாரிப்புக்கு ஆர்டர் வழங்கும் வர்த்தகரிடம் செயற்கை இழை ஆடை தயாரிப்புக்கான ஆர்டர்களும் கைவசம் அதிக அளவில் உள்ளன. நாம் செயற்கை இழை ஆடைகளை தயாரிக்கிறோம் என்று தெரிந்தால் வர்த்தகர்கள் தயங்காமல் ஆர்டர்களை வழங்குவர்.
 
எனவே திருப்பூர் நிறுவனங்கள் பருத்தி அல்லாத டென்சில், லயோசல், மொடால், விஸ்கோஸ் ஆடை தயாரிப்பில் தனி கவனம் செலுத்த வேண்டும். செயற்கை இழை துணியில் சாயமேற்றுதல், பிரின்டிங் செய்யும் தொழில்நுட்பங்களை மேம்படுத்த வேண்டும்.

செயற்கை இழையில் மதிப்பு கூட்டு ஆடை தயாரிப்பதன் மூலம் சர்வதேச அளவில் அதிக வர்த்தக வாய்ப்புகளை நம்மை நோக்கி ஈர்க்க முடியும். நிறுவனங்களுக்கு கிடைக்கும் லாப விகிதம் அதிகரிக்கும். திருப்பூரின் மொத்த ஏற்றுமதி வர்த்தகத்தை பலமடங்கு உயர்த்திக்காட்ட முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News