ஆன்மிகம்
தஞ்சை பெரிய கோவிலுக்கு வந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் இருகரம் கூப்பி கோபுர தரிசனம் செய்த காட்சி.

5 மாதங்களுக்கு பிறகு தஞ்சை பெரியகோவிலில் பக்தர்கள் தரிசனம்

Published On 2020-09-02 06:30 GMT   |   Update On 2020-09-02 06:30 GMT
5 மாதங்களுக்கு பிறகு தஞ்சை பெரியகோவிலில் அனுமதி அளிக்கப்பட்டதால் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் வழிபாட்டு தலங்களை மூடுவதற்கு மத்திய, மாநில அரசுகள் உத்தரவு பிறப்பித்தன. அதன்படி கடந்த மார்ச் 18-ந் தேதி முதல் தஞ்சை பெரியகோவில் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டன. இந்த நிலையில் ஊரடங்கில் அறிவிக்கப்பட்ட தளர்வுகளின்படி ரூ.10 ஆயிரத்திற்குள் வருமானம் வரக்கூடிய வழிபாட்டு தலங்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு திறக்கப்பட்டன.

இந்த நிலையில் அனைத்து வழிபாட்டு தலங்களையும் திறக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர். இதை ஏற்று வழிபாட்டு தலங்களை திறக்க சில கட்டுப்பாடுகளுடன் தமிழக அரசு அனுமதி அளித்தது. அதன்படி தஞ்சை மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை, அரண்மனை தேவஸ்தானத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ள கோவில்கள் அனைத்தும் திறக்கப்பட்டன. 5 மாதங்களுக்கு பிறகு நேற்று முதல் தஞ்சை பெரிய கோவிலில் பக்தர்கள் வழிபட அனுமதி அளிக்கப்பட்டது.

பெரிய கோவிலில் பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. பக்தர்கள் பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர். பெருவுடையார் சன்னதியின் உள்ளே பக்தர்கள் செல்லாமல் வெளியே நின்று தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வராகி, விநாயகர், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், கருவூரார், முருகன் சன்னதிகளிலும் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் வந்து செல்ல வழிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

பக்தர்கள் வந்து செல்ல 2 வழிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒரு வழி பக்தர்கள் சாமி தரிசனம் செய்யவும், இன்னொரு வழி வெளியே வருவதற்கும் அமைக்கப்பட்டுள்ளது. தஞ்சை பெரியகோவில் மராட்டா வளைவு அருகே தொல்லியல் துறை சார்பில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பெயர் மற்றும் அவர்களின் செல்போன் எண்கள் குறிக்கப்பட்டன.

கோவிலுக்கு வந்த அனைத்து பக்தர்களின் கைகளிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. முக கவசம் அணியாமல் வரும் பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதி அளிக்கவில்லை. பக்தர்கள் உடலின் வெப்பநிலையும் கண்டறியப்பட்டது. கோவிலுக்குள் எந்த பகுதியிலும் சுற்றிப்பார்க்கவோ, அமரவோ பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

5 மாதங்களுக்கு பிறகு பெரியகோவில் திறக்கப்பட்டதால் பக்தர்கள் பரவசம் அடைந்தனர். முதல்நாளில் நவநீதகிருஷ்ணன் எம்.பி. உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டதால் காலை முதலே ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்தனர். அரண்மனை தேவஸ்தானத்திற்குட்பட்ட 88 கோவில்கள், இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட கோவில்கள் அனைத்தும் திறக்கப்பட்டன.
Tags:    

Similar News