செய்திகள்
பிரகாஷ்ராஜ்

கடிதம் எழுதியதற்கு தேச துரோக வழக்கு: மோடி அச்சத்தை தூண்டுகிறார் - பிரகாஷ்ராஜ்

Published On 2019-10-05 09:09 GMT   |   Update On 2019-10-05 09:09 GMT
பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியவர்கள் மீது தேச துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது சமுதாயத்தில் அச்சத்தை தூண்டுகிறது என நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.
பெங்களூரு:

பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியவர்கள் மீது தேச துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது குறித்து பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியிருப்பதாவது:-

‘கடிதம் எழுதிய பிரபலங்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டிருப்பது திகைப்பை ஏற்படுத்துகிறது. சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் இருப்பவர்களுக்கே இந்த நிலை என்றால் உதவியற்றவர்களின் நிலையும் அடித்தட்டு மக்களின் நிலையும் என்னவாக இருக்கும்.

மோடி ஒரு நாட்டின் தலைவரான பிறகு அவர் ஒரு அரசியல் கட்சியின் தலைவராக இருப்பதை நிறுத்த வேண்டும். அவர் இரு தரப்பின் கருத்துகளையும் கேட்க வேண்டும்.

பிரதமர் நரேந்திர மோடி இது போன்ற ஒரு சூழ்நிலையை உருவாக்குவதன் மூலம் சமுதாயத்தில் அச்சத்தை தூண்டுகிறார்.



கேள்வி கேட்பதால் எங்களை நீதிமன்றங்களில் நிறுத்த முடியும் என்றால் யாரும் உண்மையை பேச முன்வர மாட்டார்கள்’ என பிரகாஷ்ராஜ் தெரிவித்தார்.

இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான ராஜிவ் மேனன் ‘பிரதமருக்கு கடிதம் எழுதினால் தேச துரோக வழக்கு என்பது மிகவும் வருத்தமானது. கடிதம் எழுதுவதில் என்ன தேசதுரோகத்தை பார்த்தீர்கள்?’ என்று கேட்டுள்ளார்.

இயக்குனர் வெற்றிமாறன் இதுகுறித்து கூறும்போது ’பிரதமருக்கு கடிதம் எழுதுவது என்பது ஜனநாயக முறையிலும் நாகரீக முறையிலும் விடுக்கப்பட்ட கோரிக்கை. தங்களுடைய சமூக பொறுப்பை தான் அவர்கள் செய்தார்கள்’ என்று கூறி இருக்கிறார்.
Tags:    

Similar News