செய்திகள்

8 பெண்களை திருமணம் செய்த கல்யாண மன்னன் மீது போலீசில் புகார்

Published On 2016-07-21 10:57 GMT   |   Update On 2016-07-21 10:58 GMT
மதுரையில் 8 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண மன்னன் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை:

மதுரை கே.புதூரைச் சேர்ந்தவர் சலாமியா பானு (வயது28). இவர் இன்று மதுரை மாநகர போலீஸ் கமி‌ஷனர் சைலேஷ்குமார் யாதவை சந்தித்து ஒரு மனு கொடுத்தார். அதில் கூறி இருப்பதாவது:-

எனக்கும், ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த ஒருவருக்கும் கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் நடந்தது. பின்னர் கருத்து வேறுபாட்டால் விவாகரத்து செய்து கொண்டோம்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தஸ்லிமா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது அவர், என்னுடைய உறவினர் காதர் பாட்சா என்பவர் வங்கியில் வேலை பார்ப்பதாகவும், அவரை திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று கூறினார்.

தொடர்ந்து தஸ்லிமா எனது பெற்றோருடன் பேசி, சம்மதம் பெற்று எனக்கும், காதர் பாட்சாவுக்கும் கடந்த 2 மாதங்களுக்கு திருமணம் நடந்தது. 2 பேரும் எனது தாய் வீட்டில் தங்கி இருந்து குடும்பம் நடத்தி வந்தோம்.

திருமணமாகி பல நாட்கள் ஆகியும் அவர் வேலைக்கு செல்லவில்லை. இதுகுறித்து நான் கேட்ட போது, சரிவர பதில் கூறாமல் ஏமாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த 2-ந்தேதி காதர் பாட்சா வேலை வி‌ஷயமாக வெளியூர் செல்வதாக கூறி சென்றார்.

அப்போது அவர் வீட்டில் இருந்த ரூ.3 லட்சம் ரொக்கம், 8 பவுன் நகை, ஏ.டி.எம். கார்டு ஆகியவற்றை எடுத்துக்கொண்டு சென்றார். இதுகுறித்து கேட்டபோது, ஊரில் இருந்து திரும்பி வந்தவுடன் கொடுத்துவிடுவதாக தெரிவித்தார்.

இந்த நிலையில் காதர் பாட்சாவை பற்றி விசாரித்தபோது சென்னை, திண்டுக்கல், வத்தலக்குண்டு உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 7 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்ததோடு, 8-வதாக என்னை திருமணம் செய்து ஏமாற்றி உள்ளார். இதனால் நான் அதிர்ச்சி அடைந்தேன். என்னை ஏமாற்றி மோசடி செய்த காதர் பாட்சா மற்றும் திருமணம் செய்து வைத்த தஸ்லிமா, அவரது கணவர் கயூம் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Similar News