உள்ளூர் செய்திகள்
உண்டியல் உடைக்கப்பட்ட கோவில்.

குலசேகரம் அருகே அடுத்தடுத்து 3 கோவிலில் உண்டியல் திருட்டு

Published On 2022-01-12 06:47 GMT   |   Update On 2022-01-12 06:47 GMT
குலசேகரம் அருகே ஒரே பகுதியில் 4 இடங்களில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் திருட்டு முயற்சி சம்பவங்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவட்டார்:

குலசேகரம் அருகே தும்பகோடு பகுதியில் குளத்தின்கரை இசக்கியம்மன் கோவில் உள்ளது.

இக்கோவிலில் 2 அம்மன் சன்னதிகள் உள்ளன. இந்த சன்னதிகள் முன்பு இரண்டு காணிக்கைப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. கோவில் பூசாரி பூஜை முடிந்து வீட்டுக்கு சென்றார் நேற்று காலையில் கோயில் நிர்வாகிகள் இந்தக் கோயிலுக்கு வந்த போது இங்கு வைக்கப்பட்டிருந்த காணிக்கைப் பெட்டிகளை மர்ம நபர்கள் பூட்டை உடைத்து பணம் ரூ.3000 திருடி சென்றிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து கோவில் நிர்வாகிகள் குலசேகரம் காவல் நிலையத்தில் நேற்று இரவு புகார் கொடுத்தனர். குலசேகரம் இன்ஸ்பெக்டர் உமா தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து வருகிறார்கள் அந்த பகுதியில் உள்ள சந்தேகத்திற்கிடமான நபர்களை விசாரித்து வருகிறார்கள்.

குலசேகரம் அருகே உண்ணியூர்கோணம் பகுதியில் பூலாங்கோடு என்ற இடத்தில் பூலாங்கோடு செண்பகவல்லி அம்மன் கோவில் உள்ளது. இக்கோயிலிலும் காணிக்கைப் பெட்டியை மர்ம நபர்கள் பூட்டை உடைத்து பணம் திருடி சென்றுள்ளனர். இது குறித்தும் கோவில் நிர்வாகிகள் குலசேகரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

இது போன்று தும்பகோடு அரச மரத்தடியிலுள்ள கணபதி கோயிலில் வைக்கப்பட்டிருந்த காணிக்கைப் பெட்டியை உடைக்க முயற்சி செய்தனர். பூட்டை உடைக்க முடியாததால் விட்டு சென்றனர். மேலும் அதே பகுதியிலுள்ள ஒரு காய்கறிக் கடையில் உள்ள பட்டறையை மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். இதில் பணம் எதுவும் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர்.

இச்சம்பவங்கள் தொடர்பாகவும் குலசேகரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரே பகுதியில் 4 இடங்களில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் திருட்டு முயற்சி சம்பவங்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News