செய்திகள்
கோப்புபடம்

ஊட்டி, கூடலூரில் அதிகாரிகள் சோதனை: பிளாஸ்டிக் பைகளை பதுக்கி வைத்திருந்த வியாபாரிகளுக்கு அபராதம்

Published On 2020-11-09 15:17 GMT   |   Update On 2020-11-09 15:17 GMT
ஊட்டி, கோத்தகிரி மற்றும் கூடலூரில் அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு பிளாஸ்டிக் பைகளை பதுக்கி வைத்திருந்த வியாபாரிகளுக்கு அபராதம் விதித்தனர்.
கூடலூர்:

நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் தற்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகமாக இருப்பதாக புகார் வந்தது. இதைத்தொடர்ந்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து கூடலூர் ஆர்.டி.ஓ. ராஜகுமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், வருவாய் ஆய்வாளர்கள் ராஜேந்திரன், குமார், கிராம நிர்வாக அலுவலர்கள் பாலச்சந்திரன், நாசர், மோகன்ராஜ் உள்பட வருவாய்த்துறையினர், போலீசார் நேற்று காலை 11 மணிக்கு கூடலூர் நகரில் உள்ள மொத்த விற்பனை கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்கள் பதுக்கி வைத்து வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 16 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. அதுபோன்று கடை உரிமையாளர்களுக்கு ரூ.31 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது.

கோத்தகிரி தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் சுப்பிரமணி, கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியன், கிராம உதவியாளர்கள் கொண்ட குழுவினர், நேற்று கோத்தகிரி மார்க்கெட், பஸ் நிலையம், ராம்சந்த் சதுக்கம், காமராஜர் சதுக்கம், டானிங்டன் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் வணிக வளாகங்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில் ஒரு சில கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்பாட்டுக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது. மேலும் பொது இடங்களில் முககவசம் அணியாமல் இருந்த பொது மக்களுக்கு ரூ.1000 அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஊட்டி நகராட்சி சுகாதார அலுவலர் (பொறுப்பு), சுகாதார ஆய்வாளர் மகாராஜன் மற்றும் அலுவலர்கள் மார்க்கெட் மற்றும் கமர்சியல் சாலையில் உள்ள கடைகளில் ஆய்வு நடத்தினர். அப்போது முககவசம் அணியாமல் இருந்தவர்களுக்கு ரூ.2,600 அபராதம் விதிக்கப்பட்டது. அதுபோன்று தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Tags:    

Similar News