செய்திகள்
தனியார் பள்ளிக்கூட வகுப்பறையில் கிருமிநாசினி தெளிக்கும் காட்சி.

மாணவிக்கு கொரோனா- கூடலூரில் மேலும் ஒரு பள்ளிக்கூடம் மூடல்

Published On 2021-09-28 04:07 GMT   |   Update On 2021-09-28 04:07 GMT
கூடலூர் செம்பாலா பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிக்கூட மாணவி ஒருவருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது.
கூடலூர்:

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து விட்டதால் 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில் பள்ளிக்கூடங்களும் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் தினமும் பள்ளிக்கூடம், கல்லூரிகளுக்கு சென்று வீடு திரும்புகின்றனர். வகுப்பறைகளில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றினாலும் வீட்டிலிருந்து பள்ளிக்கூடங்களுக்கு பஸ்கள் மற்றும் பிற வழிகளில் சென்று வரும் போது சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.

இதையொட்டி சில மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. கூடலூரில் கடந்த வாரம் தனியார் பள்ளிக்கூட நிர்வாகிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து பள்ளி கட்டிடங்கள் மற்றும் வகுப்பறைகளில் சுகாதாரத்துறையினர் கிருமி நாசினி தெளித்தனர். தொடர்ந்து மாணவ- மாணவிகள் மற்றும் ஆசிரியர்களிடம் மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. பின்னர் பள்ளிக்கூடம் மூடப்பட்டது.

இதன் பரிசோதனை அறிக்கையில் வேறு மாணவர்கள் ஆசிரியர்களுக்கு வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை. இதைத் தொடர்ந்து தனியார் பள்ளிக்கூடம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கூடலூர் செம்பாலா பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிக்கூட மாணவி ஒருவருக்கு வைரஸ் தொற்று நேற்று கண்டறியப்பட்டது. இதையொட்டி சுமார் 750-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகளிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து அனைத்து வகுப்பறைகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. பின்னர் ஒரு வாரத்துக்கு பள்ளிக்கூட மாணவ- மாணவிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பள்ளிக்கூடம் மூடப்பட்டது.

இதுகுறித்து சுகாதாரத் துறையினர் கூறும்போது, மாணவ மாணவிகள் வீடுகளில் இருந்து பள்ளி கூடம் மற்றும் கல்லூரிக்கு வரும் போது மிகுந்த கவனமுடன் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும். பொது இடங்களில் சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். வீடு மற்றும் பள்ளிக்கூடத்துக்கு சென்ற பின்னர் கைகளை நன்றாக கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்ய வேண்டும். இதுபோன்ற வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்றினால் மட்டுமே பாதுகாப்பாக இருக்க முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News