செய்திகள்
கோப்புப்படம்

அயோத்தியில் புதிய மசூதி பணி தொடங்கியது

Published On 2021-01-26 18:59 GMT   |   Update On 2021-01-26 18:59 GMT
அயோத்தியில் புதிய மசூதி கட்டுமான திட்டப்பணி, நேற்று குடியரசு தினத்தன்று முறைப்படி தொடங்கப்பட்டது.
அயோத்தி:

அயோத்தியில் இடிக்கப்பட்ட பாபர் மசூதிக்குப் பதிலாக புதிய மசூதி கட்ட சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2019-ம் ஆண்டு உத்தரவிட்டது. அதற்கென ராமஜென்ம பூமியில் இருந்து 24 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தான்னிப்பூரில் 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. மசூதி கட்டுமானப் பணியை மேற்கொள்ள இந்தோ-இஸ்லாமிய கலாசார கழகம் என்ற அறக்கட்டளையையும் சன்னி வக்பு வாரியம் அமைத்தது.

அதன்பின் 6 மாதம் கடந்த நிலையில், புதிய மசூதி கட்டுமான திட்டப்பணி, நேற்று குடியரசு தினத்தன்று முறைப்படி தொடங்கியது. இந்த நிகழ்வின்போது, மசூதி அறக்கட்டளை தலைவர் ஜுபார் அகமது பரூக்கி, தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். 9 மரக்கன்றுகளை அறக்கட்டளை உறுப்பினர்கள் நட்டனர்.

அறக்கட்டளை செயலாளர் அத்தார் ஹுசைன் கூறுகையில், ‘மசூதி கட்டுமானப் பணிக்கான அடிக்கல் நாட்டுவதற்கு குடியரசு தினத்தை எங்கள் அறக்கட்டளை தேர்ந்தெடுத்தது. காரணம், 70 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாளில்தான் நமது அரசியல் சாசனம் அமலுக்கு வந்தது. அரசியல் சாசனத்தின் அடித்தளமாக அமைந்த பன்முகத்தன்மைதான், புதியமசூதியின் அடிநாதமும் கூட’ என்றார்.

மேலும் அவர், ‘புதிய மசூதி, பாபர் மசூதியை விட பெரிதாக இருக்கும். ஆனால் அதேபோன்ற தோற்றத்தில் அமைந்திருக்காது’ என்றார்.

புதிய மசூதி வளாகத்தில் ஒரு பெரிய இலவச மருத்துவமனை உள்ளிட்டவை அமைவது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News