செய்திகள்
இஸ்ரோ

‘ஆதித்யா எல்-1’ செயற்கைகோள்- இந்த ஆண்டில் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டம்

Published On 2021-01-07 02:04 GMT   |   Update On 2021-01-07 02:04 GMT
சூரியனை ஆய்வு செய்யும் ‘ஆதித்யா எல்-1’ செயற்கைகோள் மற்றும் சிறிய வகை செயற்கைகோள்களை விண்ணுக்கு செலுத்தும் புதிய வகை எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை இந்த ஆண்டு செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது.
சென்னை:

இஸ்ரோ கடந்த ஆண்டில் (2020) பல சோதனைகளை சந்தித்தாலும் அமைப்புகளின் வடிவமைப்பு, வளர்ச்சியில் மெய்நிகர் பயன்முறையில் பெரிய அளவிலான பணிகளில் முன்னேற்றம் காணப்பட்டது. குறிப்பாக ‘ககன்யான், சந்திரயான்-3’ போன்ற திட்டங்களுக்கான தொழில்நுட்ப சிக்கல்கள் தீர்க்கப்பட்டு உள்ளன. அந்த வகையில் நடப்பு ஆண்டு உறுதியான அடித்தளத்தை அமைப்பதற்காக பல புதிய திட்டங்களை செயல்படுத்த இஸ்ரோ முடிவு செய்து தீவிரமாக பணியாற்றி வருகிறது. குறிப்பாக நடப்பாண்டு இறுதிக்குள் 2 வெற்றிகரமான தொடக்கங்களை முடிக்க உறுதி செய்து உள்ளோம்.

எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் உள்ள குலசேகரன்பட்டினத்தில் 2-வது ஏவுதளத்தை தொடங்குவது தனியார் விண்வெளி தொழில்முனைவோருக்கு பெரும் ஊக்கத்தை அளிக்கும். நாட்டிற்குள் தொழில்துறையின் வளர்ச்சிக்கு இஸ்ரோ பங்களிப்பு் செய்ததோடு, விண்வெளி் திட்டத்தில் செழித்து வளர பல சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு அதிகாரம் அளித்துள்ளது.

நடப்பு ஆண்டு விண்வெளித்துறையின் விரிவாக்கத்துடன், புதுமை மற்றும் மேம்பாட்டுக்கு முக்கிய கவனம் செலுத்தி இஸ்ரோவின் பணிகள் அதிகரிக்கப்போகின்றன. குறிப்பாக இந்த ஆண்டு முதல் ராக்கெட்டாக, சிறிய வகை (நானோ) செயற்கைகோளை விண்ணுக்கு செலுத்தும் ராக்கெட்டை (எஸ்.எஸ்.எல்.வி) செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதேபோல், ‘சந்திரயான்-3’, சூரியனை ஆய்வு செய்வதற்காக வடிவமைக்கப்பட்டு வரும் ‘ஆதித்யா எல்-1’ மற்றும் இந்தியாவின் முதல் தகவல் ஒளிபரப்பு செயற்கைகோள், மனிதனை விண்ணுக்கு அனுப்பும் திட்டமான ககன்யான் திட்டத்தின் கீழ் ஆளில்லா விமானம் போன்ற திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட உள்ளன.

மேற்கண்ட தகவலை இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினார்கள்.
Tags:    

Similar News