தொழில்நுட்பம்
ஐபேட் ப்ரோ

சத்தமில்லாமல் உருவாகும் ஆப்பிள் நிறுவனத்தின் 5ஜி ஐபேட்

Published On 2020-01-19 03:25 GMT   |   Update On 2020-01-19 03:25 GMT
ஆப்பிள் நிறுவனத்தின் 5ஜி வசதி கொண்ட ஐபேட் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதன் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு 5ஜி ஐபேட் சாதனத்தை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய ஐபேட் செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கும் 2020 ஐபோன் வெளியீட்டு விழாவிலேயே அறிமுகம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

இதற்கென ஆப்பிள் நிறுவனம் தாய்வானை சேர்ந்த ஸ்மார்ட்போன் உபகரணங்களை உருவாக்கும் நிறுவனத்துடன் ஒப்பந்தமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு துவக்கத்திலேயே ஐபேட் மாடல்களை அப்டேட் செய்து 5ஜி ஐபேட் மாடலை மட்டும் தாமதமாக வெளியிட ஆப்பிள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டின் முதல் அரையாண்டு கால்கட்டத்தில் பின்புறம் 3டி சென்சிங் வசதி கொண்ட புதிய ஐபேட் ப்ரோ மாடல்களை ஆப்பிள் அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. இத்துடன் ஆப்பிள் நிறுவனம் டைம் ஆஃப் ஃபிளைட் சிஸ்டத்தை பயன்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது.



முன்னதாக வெளியான தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் குறைந்த விலையில் ஐபோன் எஸ்.இ.2 மாடலை இந்த ஆண்டின் முதல் அரையாண்டு காலக்கட்டத்திற்குள் அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது.

சிறப்பம்சங்களை பொருத்தவரை ஐபோன் எஸ்.இ. 2 மாடலில் 4.7 இன்ச் எல்.சி.டி. ஸ்கிரீன் வழங்கப்படும் என்றும் இது பார்க்க ஐபோன் 8 போன்று காட்சியளிக்கும் என கூறப்படுகிறது. மேலும் இதில் ஐபோன் 11 சீரிஸ்களில் வழங்கப்பட்ட ஏ13 பயோனிக் சிப்செட் வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் டச் ஐ.டி. கைரேகை சென்சார், 3 ஜி.பி. ரேம், அதிகபட்சம் 128 ஜி.பி. மெமரி வழங்கப்படலாம்.

புகைப்படங்களை எடுக்க ஒற்றை பிரைமரி கேமரா வழங்கப்படலாம். ஐபோன் எஸ்.இ. 2 ஸ்மார்ட்போன் சமீபத்தில் 3சி சான்று மற்றும் 5வாட் சார்ஜர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதன் துவக்க விலை 450 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 32,500) வரை நிர்ணயம் செய்யப்படலாம்.

Tags:    

Similar News