லைஃப்ஸ்டைல்
மலர் மருத்துவம் உடலில் என்ன மாற்றங்களை உண்டாக்கும்?

மலர் மருத்துவம் உடலில் என்ன மாற்றங்களை உண்டாக்கும்?

Published On 2021-06-09 03:37 GMT   |   Update On 2021-06-09 03:37 GMT
உடல் ஆரோக்கியமாக இருக்க, ஆரோக்கியமான மனநலமும் அவசியம். இதன் அடிப்படையில்தான், ‘மலர் மருத்துவம்' உருவானது. அது என்ன மலர் மருத்துவம்?, எதற்காக பயன்படுகிறது?, எத்தகைய மாற்றங்களை இது உண்டாக்கும்? என்று பார்க்கலாம்.
உடல் ஆரோக்கியமாக இருக்க, ஆரோக்கியமான மனநலமும் அவசியம். இதன் அடிப்படையில்தான், ‘மலர் மருத்துவம்' உருவானது. அது என்ன மலர் மருத்துவம்?, எதற்காக பயன்படுகிறது?, எத்தகைய மாற்றங்களை இது உண்டாக்கும்? போன்ற பல கேள்விகளுக்கு, சென்னையை சேர்ந்த மலர் மருத்துவ ஆலோசகரான கற்பக ஆனந்தி யூ-டியூப்பில் பதில் அளித்து வருகிறார். நெட்டிசன்களுக்கு மலர் மருத்துவம் பற்றிய புரிதலை ஏற்படுத்தி வரும் அவரிடம், அதுபற்றி விளக்கமாக பேசினோம். பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

* உடல்நலனிற்கும், மனநலனிற்கும், மலர்களுக்கும் என்ன சம்பந்தம்?

நோய்களுக்கு அடிப்படையே மனம்தான். ஒருவருக்கு மனநிலை மாறுபடும்போது உடல்நிலையும் மாறிவிடும். முக்கியமாக கோபம், பொறாமை, அச்சம், பகை உணர்ச்சி போன்றவற்றால் ஏற்படும் விளைவுகள் உடல் நலத்தையும் கெடுத்துவிடும். உதாரணத்திற்கு... தொடர் தலைவலி ஏற்படுவதற்கு பல காரணங்கள் கூறப்படலாம். ஆனால் அதற்கு மன உளைச்சலும் ஒரு காரணமாக அமையலாம். தலைவலி மாத்திரைகள் இதற்கு தற்காலிக தீர்வை தந்தாலும், மனநல ஆரோக்கியம் மட்டுமே நிரந்தர தீர்வை தரும். அத்தகைய மனரீதியான, நிரந்தர தீர்வுகளைதான் மலர் மருத்துவம் தருகிறது.

* மலர்கள் எப்படி மனநலனை மாற்றுகின்றன?

மனிதனுக்கு, 38 வகையான உணர்வுகள் உண்டு. பயம், கோபம், பதற்றம், தனிமை உணர்வு, அதீத சிந்தனை, தோல்வி மனப்பான்மை, கவலை... இப்படி மனித உணர்வுகள் நீண்டு கொண்டே இருக்கும். இவற்றின் தாக்கமாகவே உடலும், உள்ளமும் செயல்படுகிறது. மனிதர்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கும், ஆக்ரோஷமாக இருப்பதற்கும் இவையே முக்கிய காரணமாகின்றன. இத்தகைய 38 உணர்வுகளையும் கட்டுப்படுத்தக்கூடிய வல்லமை, சில மலர்களுக்கு உண்டு. இதைதான், இங்கிலாந்து மருத்துவர் எட்வர்ட் ஆராய்ந்து, அறிக்கையாக கொடுத்திருக்கிறார்.

* மனநலனில் மாற்றம் ஏற்பட்டால், உடல்நலனில் மாற்றம் ஏற்படுமா?

நிச்சயமாக...! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பயம், கோபம், பதற்றம்… போன்ற மன உணர்வுகள் ஆட்கொண்டு அவர்களது செயல்பாட்டில் தடையை ஏற்படுத்திவிடுகிறது. இவை, மனிதர்களின் மனநலனை மட்டுமின்றி, உடல்நலனையும் பாதிக்கக்கூடும்.

* மலர்கள் எப்படி மருந்தாகின்றன?

சில நோய்களுக்கு பூக்களை நுகர்வதும், சிலவற்றுக்கு பூக்களை தொட்டு உணர்வதுமே மருந்தாகிறது. மற்ற சில நோய்களுக்கு மலர் மூலிகைகளை உட்கொள்வது தீர்வாகிறது. பூக்களில் இருக்கும் மூலிகைகள்தான், மலர் மருத்துவத்தின் முக்கிய மருந்துகள்.

* என்னென்ன நோய்களுக்கு மலர்கள் மருந்தாகுகின்றன?

ராக் ரோஸ், இம்பேடென்ஸ், கிளிமாடிஸ், ஸ்டார் ஆப் பெத்லெஹம் மற்றும் செர்ரி பிளம் போன்ற மலர்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட மருந்து மன அதிர்ச்சி, அச்சம், எதிர்கால சிந்தனை, வலி, எரிச்சல், மன அமைதியின்மை போன்றவற்றைப் போக்கி உடலுக்கும் மனதுக்கும் உற்சாகம் ஏற்படுத்தும். அதே போல் மன உளைச்சல் மற்றும் குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு அக்ரிமனி என்ற தாவரத்தில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து நல்ல பலனை தரும். அதே போல் நல்ல உறக்கம், ரத்த சுத்திகரிப்பு, சகிப்புத்தன்மை... என அனைத்து மனம் சார்ந்த பிரச்சினைகளுக்கு மலர் மருத்துவம் நல்ல பலனை அளிக்கும். ஒவ்வொரு பிரச்சினைக்கும், ஒரு மருந்துள்ளது. நம்முடைய பிரச்சினை என்னவோ அதற்கான மருந்துகளை தகுந்த ஆலோசனைப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்.

* இந்தியாவிலும், தமிழகத்திலும் மலர் மருத்துவத்தின் புரிதல் எந்தளவிற்கு இருக்கிறது?

நான் 15 வருடங்களுக்கு முன்பே மலர் மருத்துவத்தில் டிப்ளமோ முடித்துவிட்டு, அதில் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறேன். ஒருசில மலர் மருத்துவத்தை, அனுபவப் பூர்வமாகவும் உணர்ந்திருக்கிறேன். ஆகவே, இந்தியாவிலும், தமிழகத்திலும் பல வருடங்களாக மலர் மருத்துவம் இலை மறை காயாக பயன்பாட்டில் இருந்து வருகிறது. ஆனால் பெரியளவில் பிரபலமாகவில்லை. சமீபகாலமாக யூ-டியூப் மூலமாக பிரபலமாகி இருக்கிறது.
Tags:    

Similar News