செய்திகள்

பொன்.மாணிக்கவேலின் பதவியை நீட்டிக்க வேண்டும்- அர்ஜூன் சம்பத் பேட்டி

Published On 2018-12-01 05:48 GMT   |   Update On 2018-12-01 05:48 GMT
களவுபோன சிலைகள் மீட்கப்படும் வரை பொன்.மாணிக்கவேலின் பதவியை நீட்டிக்க வேண்டும் என்று அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார். #arjunsampath #ponmanickavel

ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், இந்து மக்கள் கட்சி - தமிழ்நாடு சார்பில், சபரிமலை புனிதம் காக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும், கேரள அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஓசூர் ராம்நகர் அண்ணா சிலையருகில் நடந்த ஆர்ப்பாட்ட நிகழ்ச்சியில், அக்கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

‘‘தமிழ்நாடு முழுவதும் சுவாமி அய்யப்பனை இழிவுபடுத்தும் வகையிலும், அய்யப்ப பக்தர்களின் மனம் புண்படும் வகையிலும் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் பேசி வருகிறார். சீமானின் பேச்சை கண்டித்தும், சபரிமலை அய்யப்பசாமி கோவிலின் புனிதம் கெடும் வகையில் செயல்பட்டு வரும், பினராயி விஜயன் ஆட்சியை டிஸ்மிஸ் செய்யக்கோரியும், சபரிமலையின் புனிதம் காக்க சிறப்புச்சட்டம் இயற்ற கோரியும் இந்து மக்கள் கட்சி சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிலைகள் முழுமையாக மீட்கும்வரை நீட்டிக்க வேண்டும்

இன்று மலேசியாவில் தமிழர்கள், கோவில்கள், தமிழ் பள்ளிக்கூடங்கள் தாக்கப்பட்டு வரும் நிலையில், சேவ் சிரியா இயக்கம் நடத்தியவர்கள் எங்கே சென்றார்கள்?. மலேசியாவில் தமிழர்கள் மற்றும் கோவில்களை பாதுகாக்க, பிரதமர் மோடி, மலேசிய அரசை அழைத்து பேசி, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்து மக்கள் கட்சி சார்பிலும், இதற்காக மலேசிய தூதரகத்தில் மனு வழங்கப்பட்டு உள்ளது.


தமிழக உயர்நீதி மன்றம், பொன்.மாணிக்கவேலுக்கு, ஒரு வருடம் பணி நீட்டிப்பு வழங்கியிருப்பதை இந்து மக்கள் கட்சி வரவேற்கிறது. அனைத்து ஆன்மீகவாதிகளும் மகிழ்ச்சியடைந்து உள்ளனர். வெகு நேர்மையாக, துணிச்சலாக செயல்பட்ட பொன்.மாணிக்கவேலுக்கு தொடர்ந்து பணி நீட்டிப்பு வழங்க வேண்டும். 500-க்கும் மேற்பட்ட வழக்குகளில், குற்றவாளிகள் யார் என்பதை கண்டுபிடித்து அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும், களவுபோன சிலைகள் மீட்கப்படும் வரை, பொன்.மாணிக்கவேலை, இந்த பதவியில் நீட்டிப்பு செய்ய வேண்டும். ஓசூர் பகுதியில், ஆணவக்கொலைகளை தடுப்பதற்கு, இந்த பகுதியில் சாதிக்கட்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் சாதி கட்சிகளை தடை செய்தால் மட்டும்தான், ஆணவக்கொலைகள் முடிவுக்கு வரும்’’.

இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  #arjunsampath #ponmanickavel

Tags:    

Similar News