இந்தியா
கொரோனா பரிசோதனை

புதிதாக 975 பேருக்கு தொற்று- டெல்லியை தொடர்ந்து உத்தரபிரதேசம், அரியானாவில் கொரோனா பாதிப்பு உயர்வு

Published On 2022-04-16 04:16 GMT   |   Update On 2022-04-16 04:16 GMT
கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 796 பேர் முழுமையாக மீண்டுள்ளனர். இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 4 கோடியே 25 லட்சத்து 7 ஆயிரத்து 834 ஆக உயர்ந்துள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவில் இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 975 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

நேற்று பாதிப்பு 949 ஆக இருந்த நிலையில், இன்று பாதிப்பு சற்று உயர்ந்துள்ளது. குறிப்பாக டெல்லி, அரியானாவில் புதிய பாதிப்பு தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது.

டெல்லியில் கடந்த 11-ந்தேதி பாதிப்பு 137 ஆக இருந்தது. பின்னர் தொடர்ந்து உயர்ந்து நேற்று முன்தினம் 325 ஆக அதிகரித்த நிலையில், நேற்று 366 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது கடந்த 47 நாட்களில் இல்லாத அளவில் தினசரி பாதிப்பில் அதிகம் ஆகும். அங்கு தினசரி பாதிப்பு விகிதம் 3.95 சதவீதமாக உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி மொத்தம் 1,072 பேர் தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் 574 பேர் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புதிதாக பாதிக்கப்படுபவர்களில் 27 சதவீதம் பேர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரம் குழந்தைகளுக்கு பாதிப்பின் தாக்கம் பெரிய அளவில் இல்லை என்பது சற்று ஆறுதலாக உள்ளது.

கடந்த மாத இறுதியில் நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டது. இதனால் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது ஆகியவை கட்டாயம் இல்லை என்ற நிலை உள்ளது. இதுவும் தொற்று பரவல் அதிகரிக்க ஒரு காரணமாக கூறப்படுகிறது.

தற்போது பரவும் கொரோனா டெல்டா வைரஸ் போன்று பெரிய பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும், ஒமைக்ரானை விட அதிவேகத்தில் பரவுவதாக சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

எனவே பரவல் மேலும் அதிகரிக்காமல் இருப்பதற்கு பொது இடங்களில் கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் எனவும் நிபுணர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

இதற்கிடையே அரியானாவிலும் புதிய பாதிப்புகள் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அங்கு கடந்த புதிதாக 174 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதே போல உத்தரபிரதேசத்தில் புதிய பாதிப்பு கடந்த 34 நாட்களில் இல்லாத அளவில் 100-ஐ கடந்துள்ளது. அங்கு நேற்று 108 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

நாடு முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 40 ஆயிரத்து 947 ஆக உயர்ந்தது.

கொரோனா பாதிப்பால் மிசோரம், மகாராஷ்டிரா, ஒடிசா, அரியானாவில் தலா ஒருவர் என மேலும் 4 பேர் இறந்துள்ளனர்.

நாட்டில் இதுவரை தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 5,21,747 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 796 பேர் முழுமையாக மீண்டுள்ளனர். இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 4 கோடியே 25 லட்சத்து 7 ஆயிரத்து 834 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது 11,366 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நேற்று முன்தினத்தைவிட 175 அதிகம் ஆகும்.

நாடு முழுவதும் இதுவரை 186 கோடியே 38 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இதில் நேற்று 6,89,724 டோஸ்கள் அடங்கும்.

இதற்கிடையே நேற்று 3,00,918 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்த பரிசோதனை எண்ணிக்கை 83.14 கோடியாக உயர்ந்துள்ளது.

Tags:    

Similar News