செய்திகள்
கோப்புப்படம்

கொரோனா தடுப்பூசி போடுவதில் வயதானவர்கள், சுகாதாரபணியாளருக்கு முன்னுரிமை - மத்திய அரசு அறிவிப்பு

Published On 2020-11-19 22:25 GMT   |   Update On 2020-11-19 22:25 GMT
தடுப்பூசி போடுவதில் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், சுகாதாரபணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் மத்திய சுகாதார மந்திரி ஹர்ஷவர்தன் தெரிவித்தார்.
புதுடெல்லி:

கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி தயாரிக்கும் பணிகளை அனைத்து நாடுகளும் தீவிரப்படுத்தி உள்ளன.

இந்த கொடூர தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை இந்தியாவும் முடுக்கி விட்டுள்ளது.

இதன் பயனாக இந்தியாவில் பல்வேறு தடுப்பூசிகள் முக்கிய கட்ட பரிசோதனைகளில் உள்ளன. அந்தவகையில் இந்தியாவின் பாரத் பயோடெக் மற்றும் இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் தயாரித்துள்ள தடுப்பூசி, 3-ம் கட்ட மனித பரிசோதனைகளில் உள்ளன. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்துள்ள தடுப்பூசியின் 3-ம் கட்ட பரிசோதனைகள் நடந்து வருகின்றன.

இதைப்போல ரஷியாவின் ‘ஸ்புட்னிக்-வி’ தடுப்பூசியின் 2 மற்றும் 3-ம் கட்ட பரிசோதனைகள் விரைவில் தொடங்க இருக்கின்றன. மேலும் அமெரிக்காவின் பைசர் மற்றும் மாடர்னா நிறுவனங்கள் தயாரித்துள்ள தடுப்பூசிகளும் நல்ல பலனை அளிப்பதாக தகவல் வெளியாகியுள்ளதை தொடர்ந்து அந்த தடுப்பூசிகளையும் இந்தியாவில் தயாரிப்பதற்கான வேலைகள் நடந்து வருகின்றன.

இவ்வாறு ஏராளமான தடுப்பூசிகள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் நிலையில் இருப்பதால், அவற்றை வினியோகிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கி உள்ளது. இதில் முன்னுரிமை பிரிவுகளை கண்டறியும் பணிகளும் முடுக்கி விடப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் ஆன்லைன் கருத்தரங்கு ஒன்றில் பேசிய மத்திய சுகாதார மந்திரி ஹர்ஷவர்தன் தடுப்பூசி வினியோகிக்கும் படிநிலைகள் குறித்து விளக்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி அடுத்த 3 அல்லது 4 மாதங்களில் தயாராகி விடும். குறிப்பாக அடுத்த ஆண்டு (2021) ஜூலை-ஆகஸ்டு மாதத்துக்குள் 25 முதல் 30 கோடி வரையிலான மக்களுக்காக 40 முதல் 50 கோடி டோஸ்கள் வரையிலான தடுப்பூசி கிடைக்கும் என கணக்கிடப்பட்டு இருக்கிறது.

தடுப்பூசி வினியோகிப்பதில் முன்னுரிமை நடவடிக்கைகளை கடைப்பிடிப்பது இயற்கைதான். குறிப்பாக கொரோனாவுக்கு எதிரான போராளிகளான சுகாதார பணியாளர்களுக்கு இதில் முன்னுரிமை அளித்து தடுப்பூசி போடப்படும் என்பது உங்களுக்கு தெரிந்ததுதான்.

அடுத்ததாக 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போடப்படும். பின்னர் 50 முதல் 65 வயது வரையிலானவர்களுக்கு வழங்கப்படும். அடுத்ததாக பிற நோய்களை கொண்ட 50 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு வழங்கப்படும்.

இவை அனைத்தும் விஞ்ஞான கண்ணோட்டத்துடன், நிபுணர்களால் முடிவு செய்யப்படுகின்றன. இதற்காக மிகவும் விரிவான திட்டம் எங்களிடம் உள்ளது. அடுத்த ஆண்டு மார்ச்-ஏப்ரல் மாதங்களில் செய்ய வேண்டிய பணிகளுக்கான திட்டங்களை இப்போதே தொடங்கி உள்ளோம்.

மேலும் கொரோனாவுக்கு எதிராக ஒருங்கிணைந்த ஒரு எதிர்ப்பு திட்டத்தை நாங்கள் தொடங்கி உள்ளோம். அத்துடன் அனைத்து முக்கியமான தடுப்பூசிகளையும் மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம். அந்தவகையில் சுமார் 20 தடுப்பூசிகள் பல்வேறு கட்ட பரிசோதனைகளில் உள்ளன.

கொரோனாவை தடுப்பதில் 90 முதல் 99 சதவீதம் வரை, மற்றவர்களை பாதுகாப்பது மற்றும் ஊக்குவிப்பதிலேயே இருக்கிறது. இந்த கொடிய வைரசிடம் இருந்து நீங்கள் தப்பித்துக்கொள்ள, சரியாக முககவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, கைகளை சுத்தமாக வைத்திருப்பது போன்ற எளிய தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றினாலே போதும்.

இவ்வாறு ஹர்ஷவர்தன் கூறினார்.
Tags:    

Similar News