ஆன்மிகம்
இஸ்லாம் வழிபாடு

இறைவன் தரும் பாதுகாப்பு...

Published On 2020-08-18 07:15 GMT   |   Update On 2020-08-18 07:15 GMT
இறைவன் தரும் பாதுகாப்பு... மனித இனம் படைக்கப்பட்ட பிறகு அவர்களில் இருந்தே நபிமார்களையும் அல்லாஹ் படைத்தான். அந்த நபிமார்களும் மனிதர்கள் போல வறுமையிலும், நோயிலும் சோதிக்கப்பட்டார்கள். இதற்கு காரணமும் உள்ளது.
மனித இனம் படைக்கப்பட்ட பிறகு அவர்களில் இருந்தே நபிமார்களையும் அல்லாஹ் படைத்தான். அந்த நபிமார்களும் மனிதர்கள் போல வறுமையிலும், நோயிலும் சோதிக்கப்பட்டார்கள். இதற்கு காரணமும் உள்ளது.

அதாவது, மனிதன் நபிமார்களை நோக்கி, ‘நீங்கள் வலிமை பெற்றவர்களாக, நோய் நொடியில்லாத சிறப்பான அந்தஸ்தில் வாழ்ந்ததால் அல்லாஹ்வின் கட்டளையை உங்களால் நிறைவேற்ற முடிந்தது. ஆனால் நாங்கள் அப்படியல்ல. அதனால் எங்களால் அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்ற முடியாத நிலை’ என்று சொல்ல வாய்ப்பு உள்ளது.

அப்படி ஒரு நிலை வரக்கூடாது என்பதற்காகவே நபிமார்களும் சாதாரண மனிதர்கள்போல நடத்தப்பட்டு, இறைவனின் சோதனைக்கு ஆளாக்கப்பட்டார்கள்.

இதற்கு உதாரணமாக ஐயூப் நபி அவர்களின் வாழ்க்கையை எடுத்துக்கொள்ளலாம். செல்வத்திலும், ஆரோக்கியத்திலும் சிறந்த நிலையில் ஐயூப் நபிகளின் வாழ்க்கை இருந்தது. அவர்களின் இறைநம்பிக்கையை சோதிக்கும் நிலை உருவானது. முதலில் அவர்களிடம் இருந்து செல்வம் பறிக்கப்பட்டது. பின்னர் அவர் தீராத நோய் கொண்டு சோதிக்கப்பட்டார். அவரது உடல் முழுவதும் புண் ஏற்பட்டு அவதிப்பட்டார்கள். இருப்பினும் அந்த கொடிய நோயைப் பொருட்படுத்தாமல் இறைசேவை செய்து வந்தார்கள்.

நோய் தாக்கிய நிலையிலும் இறைவன் மீது வைத்த நம்பிக்கையை அவர் இழக்கவில்லை. “நிச்சயமாக என்னை நோய் தீண்டியிருக்கிறது. இறைவனே! நீ கிருபை செய்பவனாக இருக்கின்றாய்” என்று பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்கள். ‘நோயை நீக்கி விடு’ என்று கூட சொல்லவில்லை. அதனை அல்லாஹ் பார்த்துக்கொள்வான் என்ற நம்பிக்கையில் உறுதியாக இருந்தார்கள்.

நோயைத் தந்தவன் அல்லாஹ், அதனை நீக்குபவனும் அவனே. எனவே நோயை பொறுமையோடு சகித்துக்கொண்டு பிரார்த்தனை செய்தார்கள். அல்லாஹ்வும் அவர்களின் நோயை நீக்கி குணப்படுத்தினான்.

இதையே திருக்குர்ஆன் வசனங்களில் அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகின்றான்:

“(நபியே!) ஐயூப்பையும் (நினைவு கூர்வீராக!) அவர், தன் இரட்சகனிடம், ‘நிச்சயமாகத் துன்பம் என்னைப் பீடித்துக் கொண்டது, நீயோ கிருபையாளர்களில் எல்லாம் மிகக் கிருபையாளன்’ என்று (பிரார்த்தனை செய்து) அழைத்தபோது, நாம் அவருக்கு பதிலளித்து, பின்னர், அவருக்கிருந்த துன்பத்தையும் நீக்கிவிட்டோம், அவருடைய குடும்பத்தையும், அவர்களுடன் அவர்களைப் போன்றவர்களையும் அவருக்கு நாம் கொடுத்தோம், இது நம்மிடத்திலிருந்துள்ள கிருபையாகவும், (நம்மை) வணங்குவோருக்கு நினைவூட்டுதலாகவும் இருக்கிறது.” (திருக்குர்ஆன் 21:83,84)

எனவே, நமக்கு ஏதேனும் துன்பம், சோதனை, நோய் ஏற்பட்டிருந்தால், நாம் ஐயூப் நபியின் வழிமுறையைப் பின்பற்றி அதை பொறுமையோடு சகித்துக்கொள்ள வேண்டும். ஐயூப் நபிகள் போல நாமும் நம்பிக்கையோடு பிரார்த்தனையை மேற்கொள்ள வேண்டும். அப் போது, நிச்சயமாக அல்லாஹ் நோய்களை விட்டும், துன்பங்களை விட்டும் நம்மை காத்தருள்வான். நாம் எதற்கும் கவலைப்பட தேவையே இல்லை. நமக்கு துன்பங் களில் இருந்து பாதுகாப்பு தருவதற்கு அல்லாஹ் ஒருவனே போதுமானவன்.

பாதில் அமீன், அதிரை
Tags:    

Similar News