செய்திகள்
பிரியங்கா காந்தி

பிரியங்கா இன்று வாரணாசி செல்கிறார்

Published On 2020-01-10 09:29 GMT   |   Update On 2020-01-10 10:08 GMT
பிரியங்கா இன்று (வெள்ளிக்கிழமை) பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசி தொகுதிக்கு செல்கிறார். வாரணாசியில் குடியுரிமை சட்ட போராட்டத்தின்போது கைதாகி விடுதலையானவர்களின் வீடுகளுக்கு செல்கிறார்.

லக்னோ:

உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை மீண்டும் வலுப்படுத்தும் முயற்சிகளில் சோனியா மகள் பிரியங்கா ஈடுபட்டுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் மட்டும் கவனம் செலுத்தும் வகையில் பிரியங்கா வுக்கு காங்கிரசில் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசத்தில் சிறு பிரச்சினை என்றாலும், அதில் பிரியங்கா கவனம் செலுத்தி வருகிறார். பிரச்சினைகளால் பாதிக்கப்படும் மக்களை முதல் ஆளாக சென்று சந்தித்து பேசி ஆறுதல் தெரிவிக்கிறார். இதன் மூலம் மக்கள் மனதில் காங்கிரஸ் கட்சியை மீண்டும் இடம் பெற செய்ய முடியும் என்று நினைக்கிறார்.

சோன்பத்ரா படுகொலை மற்றும் உன்னாவ் பெண் கற்பழிப்பு சம்பவங்களின் போது மாயாவதி, அகிலேஷ் யாதவ் ஆகியோருக்கு முன்னதாக, பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்றார். போலீசார் தடை விதித்த போதெல்லாம் அவர் எதிர்ப்பு தெரிவித்து மறியல் செய்தார். தற்போது அவர் உத்தரபிரதேசத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தில் பங்கேற்றவர்களை சந்தித்து பேசி வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக பிரியங்கா இன்று (வெள்ளிக்கிழமை) பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசி தொகுதிக்கு செல்கிறார். வாரணாசியில் குடியுரிமை சட்ட போராட்டத்தின்போது கைதாகி விடுதலையானவர்களின் வீடுகளுக்கு செல்கிறார்.

குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் பனாரஸ் இந்து பல்கலைக்கழக மாணவர்களும் நூற்றுக்கணக்கில் கலந்து கொண்டனர். அந்த மாணவர்களையும் பிரியங்கா சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார்.

உத்தரபிரதேசத்தில் கடந்த 30 ஆண்டுகளாக ஆட்சியைப் பிடிக்க முடியாமல் காங்கிரஸ் கட்சி திணறி வருகிறது. எனவே அங்கு காங்கிரசின் அடித்தளத்தை வலுப்படுத்தும் முயற்சிகளில் பிரியங்கா நடவடிக்கை எடுத்து வருகிறார்.

உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட செய்யும் வகையில் காங்கிரசை தயார்படுத்த பிரியங்கா தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளார்.

Tags:    

Similar News