வழிபாடு
தேரோட்டம் நடைபெற்றபோது எடுத்த படம்.

தென்காசி காசிவிஸ்வநாத சுவாமி கோவிலில் மாசித்திருவிழா தேரோட்டம்

Published On 2022-02-16 09:03 GMT   |   Update On 2022-02-16 09:03 GMT
தென்காசி காசி விஸ்வநாதர் சுவாமி கோவிலில் நாளை(வியாழக்கிழமை) 10-ம் திருநாளன்று தீர்த்தவாரியும், இரவு ரி‌ஷப வாகனத்தில் சுவாமி -அம்பாள் திருவீதி எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
தென்காசி அருள்தரும் உலகம்மன் உடனுறை காசி விஸ்வநாதர் சுவாமி கோவிலில் பிரசித்தி பெற்ற மாசி மகப்பெருவிழா கடந்த 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவின் 9-ம் நாளான இன்று தேரோட்டம் நடைபெற்றது. தென்காசி மேலப்புலியூர் வணிக வைசியர் சமுதாயத்தின் சார்பில் காலை 5.40 மணிக்கு சுவாமி-அம்பாள் தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும், காலை 9 மணிக்கு மேல் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

சுவாமி-அம்பாள் ஆகியோர் 2 தேர்களில் நகர்வலம் வந்தனர். தேர்கள் 4 ரத வீதிகளிலும் சுற்றி கோவில் வாசல் முன்பு நிலைக்கு வந்தடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். மேலும் தரிசனம் செய்வதற்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி இணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர் மற்றும் தக்கார் சங்கர், தென்காசி உதவி ஆணையர் கோமதி, செயல் அலுவலர் சுசிலா ராணி, தென்காசி ஆய்வர் சரவணகுமார் மற்றும் அனைத்து சமுதாய நிர்வாகிகள், கோவில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

தொடர்ந்து இன்று இரவு 8 மணிக்கு கனக பல்லாக்கில் சுவாமி மற்றும் அம்பாள் திருவீதி எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

நாளை(வியாழக்கிழமை) 10-ம் திருநாளன்று தீர்த்தவாரியும், தென்காசி நாடார் சமுதாயத்தின் சார்பில் அபிஷேக தீபாராதனையும், மாலையில் புஷ்பாஞ்சலி, இரவு ரி‌ஷப வாகனத்தில் சுவாமி -அம்பாள் திருவீதி எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
Tags:    

Similar News