உள்ளூர் செய்திகள்
ஈஸ்டர் திருநாளையொட்டி சேலம் குழந்தையேசு பேரலாயத்தில் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொண்டவர்கள்.

ஈஸ்டர் பண்டிகையையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி

Published On 2022-04-17 11:22 GMT   |   Update On 2022-04-17 11:22 GMT
ஈஸ்டர் பண்டிகையையொட்டி சேலம் மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி
சேலம்:

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மீண்டும் உயிர்பெற்ற நாளை கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடி வருகிறார்கள்.
 
அன்றைய தினம் கிறிஸ்தவர்கள் அனைவரும் புத்தாடை அணிந்து கொண்டு ஆலயங்களுக்கு சென்று அங்கு நடைபெறும் சிறப்பு பிரார்த்தனை, திருப்பலி ஆகியவற்றில் கலந்து கொள்வார்கள். இத்தகைய தினம் கிறிஸ்தவர்களுக்கு முக்கிய நாளாகும்.

இந்த ஆண்டின் ஈஸ்டர் பண்டிகை தினமான இன்று (ஞாயிற்றுக்கிழமை) சேலம் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை மற்றும் ஏசு உயிர்ப்பு திருப்பலி நடைபெற்றது. 

இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.  தொடர்ந்து இன்று காலையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

சேலம் அரிசிபாளையம் குழந்தை இயேசு பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது. சேலம் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் தேவாலயம், கோட்டை சி.எஸ்.ஐ. லெக்லர் நினைவாலயத்திலும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

இதேபோல், அஸ்தம்பட்டி சி.எஸ்.ஐ. இம்மானுவேல் ஆலயம், ஜங்சன் சி.எஸ்.ஐ. திரித்துவ ஆலயம், சூரமங்கலம் இருதய ஆண்டவர் ஆலயம், ஜான்சன்பேட்டை அந்தோணியார் ஆலயம், சன்னிசாசிகுண்டு புனித சூசையப்பர் ஆலயம், அழகாபுரம் புனித மைக்கேல் ஆலயம் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி, ஆராதனை நடந்தது. 
இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.  மேலும், ஒருவருக்கொருவர் ஈஸ்டர் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.
Tags:    

Similar News