செய்திகள்
பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங்

எல்லை பதற்றம்... அமெரிக்க பாதுகாப்புத் துறை மந்திரியுடன் ஆலோசனை நடத்தும் ராஜ்நாத் சிங்

Published On 2020-06-30 04:12 GMT   |   Update On 2020-06-30 04:12 GMT
லடாக் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், இன்று அமெரிக்க பாதுகாப்புத்துறை மந்திரியுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
புதுடெல்லி:

கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நடந்த மோதலைத் தொடர்ந்து இந்தியா-சீனா எல்லையில் போர் பதற்றம் உருவானது. இரு தரப்பிலும் எல்லையில் படைகள் குவிக்கப்பட்டன. பதற்றத்தை தணிக்கும் முயற்சியில் இரு தரப்பு அதிகாரிகளும் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.

பேச்சுவார்த்தைக்கு பிறகு எல்லையில் படை விலக்கலுக்கான நடவடிக்கைகளை இருதரப்பும் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. எனினும் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவம் மீண்டும் ஊடுருவி, இந்திய பகுதிக்குள் முகாமிட்டு உள்ளதை செயற்கைக்கோள் படங்கள் உறுதி செய்தன. 

இந்த சூழ்நிலையில் லெப்டினன்ட் ஜெனரல் மட்டத்தில் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடக்கிறது. உண்மையான எல்லை கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் உள்ள சுசுல் செக்டாரின் இந்திய பகுதிக்குள் காலை 10.30 மணிக்கு நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில், எல்லையில் பதற்றத்தை தணிப்பது குறித்தும், படைகள் விலக்கலுக்கான வழிமுறைகளை இறுதி செய்வது குறித்தும் இருதரப்பும் ஆலோசனை நடத்துகின்றன.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், அமெரிக்க பாதுகாப்புத்துறை மந்திரி மார்க் எஸ்பருடன் தொலைபேசியில் பேசவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த பேச்சுவார்த்தையின்போது இந்தியா-சீனா எல்லை பதற்றம் தொடர்பாக ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News