செய்திகள்

பஸ்,வணிக நிறுவனங்களில் வாங்க மறுப்பு: பத்து ரூபாய் நாணயம் போலியா?

Published On 2016-11-30 07:28 GMT   |   Update On 2016-11-30 07:28 GMT
வணிக நிறுவனங்கள், பஸ்களில் 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை எற்படுத்தி உள்ளது.
நெல்லை:

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த 8-ந்தேதி பிரதமர் மோடி அறிவித்தார். அன்று முதல் இன்று வரை பணம் எடுக்க பொதுமக்கள் திண்டாடி வருகின்றனர். வங்கிகளில் போதிய பணம் இல்லை, ஏ.டி.எம். மையங்களும் மூடப்பட்டு கிடக்கின்றன. புதிய 500 ரூபாய் நோட்டு இன்னமும் சரிவர கிடைக்கவில்லை. இதனால் வங்கிகளிலும், ஏ.டி.எம். மையங்களிலும் பணத்திற்காக நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது.

பல வங்கிகளில் பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களிடம் மொத்தமாக 10 ரூபாய் நாணயங்களை வழங்கின. இதனால் தற்போது அதிக அளவு 10 ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் உள்ளன. இந்நிலையில் 10 ரூபாய் நாணயங்கள் போலி எனவும், கள்ள நோட்டு அச்சடிப்பது போல் 10 ரூபாய் நாணயங்களையும் போலியாக தயாரித்து வெளியிட்டுள்ளனர் என்றும் வதந்தி பரவியது.

இதைத் தொடர்ந்து வணிக நிறுவனங்கள், பஸ்களில் 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்து வருகின்றனர். பொதுமக்கள் பலரிடம் 10 ரூபாய் நாணயங்கள் அதிக அளவு உள்ள நிலையில் அதை வாங்க மறுப்பதால் அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பஸ்களில் வாங்க மறுப்பதால் குறைந்த அளவு பணத்துடன் வரும் பயணிகள் திண்டாட்டம் அடைகின்றனர்.

இது குறித்து பஸ் கண்டக்டர் ஒருவர் கூறுகையில், ‘போலி 10 ரூபாய் நாணயங்கள் அதிக அளவு புழக்கத்திற்கு வந்துள்ளதாக கூறுகின்றனர். 10 என்ற எண் சில நாணயங்களின் மத்தியிலும், சிலவற்றில் கீழ் பகுதியிலும் உள்ளன. மத்தியில் 10 என்று அச்சிடப்பட்டுள்ள நாணயம் தான் போலி என்கின்றனர். மேலும் நாணயத்தில் சரியாக 10 கோடுகள் இருந்தால் தான் அது ஒரிஜினல் என்கின்றனர். இதையெல்லாம் நாங்கள் பார்த்து பார்த்து வாங்க முடியுமா?. டெப்போவிலும் வாங்க மறுக்கின்றனர். அதனால் தான் நாங்கள் 10 ரூபாய் நாணயத்தையே வாங்க மறுத்து வருகிறோம்’ என்றார்.

ஏற்கனவே ரூபாய் நோட்டு பிரச்சினையில் சிக்கித் தவித்து வரும் பொதுமக்கள் 10 ரூபாய் நாணயங்களையும் வாங்க மறுத்ததால் நெல்லை, கோவில்பட்டியில் பஸ், வணிக நிறுவனங்களில் தகராறில் ஈடுபட்டனர்.

இந்த பிரச்சினை குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘ஒவ்வொரு சமயத்திலும் வெளியிடப்படும் நாணயங்கள் அவ்வப்போது உள்ள சமூக, பொருளாதார, பண்பாட்டு நிலைகளை வெளிக்காட்டும் வகையிலான அடையாளங்கள் இடம் பெறும். எனவே 10 ரூபாய் நாணயங்கள்அனைத்தும் செல்லும். அவற்றை வாங்க மறுப்பது சட்டப்படி குற்றம்’ என்று கூறியுள்ளது.

இது குறித்து வணிக நிறுவனத்தினர் கூறும் போது, ‘கடந்த காலங்களில் 3 போலி நாணய தொழிற்சாலைகள் கண்டு பிடிக்கப்பட்டு அவற்றில் இருந்து 6 லட்சம் போலி நாணயங்கள் கைப்பற்றப்பட்டன. அது போல தற்போது நிலவும் சில்லறை தட்டுப்பாட்டை பயன்படுத்தி சில சமூக விரோதிகள் போலி நாணயங்களை வெளியிடலாம். எனவே ரிசர்வ் வங்கி உண்மையான 10 ரூபாய் நாணயங்கள் எவை என்பதை விளக்கி அறிக்கை வெளியிட வேண்டும்’ என்றனர்.

Similar News