கோவில்கள்
திருக்கோடீஸ்வரர் திருக்கோவில்

திருக்கோடீஸ்வரர் திருக்கோவில் - திருக்கோடிக்காவல்

Published On 2022-03-26 01:30 GMT   |   Update On 2022-03-26 01:30 GMT
இத்தலத்தில் செய்யும் தியானம், ஹோமம், ஜபம், எல்லாம் மும்மடங்காகப் பலிக்கின்ற பெருமையுடைய தலம். சனிபகவானும் எமனும் எதிரெதிர் சன்னதியில் அருள்கின்ற தலம்.
இறைவர் திருப்பெயர் : திருகோடீஸ்வரர்
இறைவியார் திருப்பெயர் : வடிவாம்பிகை, திரிபுரசுந்தரி
தல மரம் : பிரம்பு
தீர்த்தம் : சிருங்கோத்பவ தீர்த்தம், காவிரிநதி

தல வரலாறு:

சிவனின் தேவார பாடல் பெற்ற காவிரி வடகரை தலங்களில் இது 37வது தலம். ஒரு சமயம் கைலாசத்தையும், திருகோடிக்காவையும் ஒரு தராசில் வைத்துப் பார்த்த போது, இத்தலம் உயர்ந்து, கைலாசம் கீழே போய்விட்டது. என்னுடைய திருமேனிக்கு சமமான பெருமை கொண்ட தலம் இது என்று சிவபெருமானால் சிலாகித்து கூறப்பட்ட தலம்.

திருகோடிக்கா என்ற ஒலியை காதால் கேட்டவர்களைக் கூட தண்டிக்கும் உரிமை யமனுக்கு இல்லை என்றும், அந்த மண்ணை மிதித்தவர்களிடம் அவன் நெருங்கவே கூடாது என்றும் சிவபெருமான் கட்டளையிடுகிறார். காசியைப் போல இத்தலத்தில் வாழ்பவர்களுக்கும் யமபயம் கிடையாது. இன்றுவரை இவ்வூரில் மயானம் தனியாக இல்லை இங்கு இறப்பவர்களுக்கு அமைதியான மரணம் தான் நிகழ்கின்றது, துர் மரணங்கள் இல்லை, இங்கு இறப்பவர்களை இன்றுவரை பக்கத்து ஊரில் தான் அடக்கம் செய்கிறார்கள்.

எமனின் கை மற்றும் கால்கள் விலங்கால் கட்டப்பட்டுள்ளது. இத்தலத்தில் செய்யும் தியானம், ஹோமம், ஜபம், எல்லாம் மும்மடங்காகப் பலிக்கின்ற பெருமையுடைய தலம். சனிபகவானும் எமனும் எதிரெதிர் சன்னதியில் அருள்கின்ற தலம். அதேபோல் சித்திரகுப்தனும், துர்வாச முனிவரும் எதிரெதிர் சன்னதியில் உள்ள தலம்.

தலத்தின் தீர்த்தமான் காவேரி நதி உத்திரவாஹினியாக தெற்கிலிருந்து வடக்காக பாய்கிறது. கார்த்திகை மாதம், ஞாயிறு அன்று விடியற்காலையில் இத்தலத்தில் காவிரியில் நீராடினால், எல்லா பாவங்களும் தொலைந்துவிடும் என்பது ஐதீகம்.

இத்தலத்தில் உள்ள சனிபகவான் பாலசனி என்று அழைக்கப்படுகிறார். இவரது தலையில் சிவலிங்கம் உள்ளது. கண்டராதித்த சோழரின் மனைவியுமான செம்பியன்மாதேவியாரின் ஆனைப்படி செங்கற்களால் ஆன கோயில் இடிக்கப்பட்டு கற்றளியாக திரும்பக் கட்டப்பட்ட சிறப்பையுடைய தலம்.

மூன்று கோடி மந்திரங்களும் சாப விமோசனம் பெற இத்தலத்திற்கு வந்து சிவனின் முன்னிலையில் சரியாக மந்தரங்களை உச்சரித்து சாப விமோசனம் பெற்ற தலம். மந்திரங்கள் தவறான கொள்கைக்கு பயன்படுத்தப் பட்டதால் மந்திரங்கள் மீதே கோபப்பட்ட துர்வாசர் மந்திரத்திற்கு சாபம் கொடுத்தார். மூன்று கோடி மந்திரங்களும் சாப விமோசனம் பெற இத்தலத்திற்கு வந்து சிவனின் முன்னிலையில் சரியாக உச்சிக்கப்பட்டு சாபவிமோசனம் பெற்றன.

அதேபோல் மூன்று கோடி தேவர்களும் இத்தல இறைவனை செய்துள்ளனர். எனவே இத்தல இறைவனின் திருநாமம் "கோடீஸ்வரர்' என்றும், ஊர் "திருக்கோடிக்கா' அழைக்கப்பட்டது.

திரிகோடி மந்திரங்களுக்கு சாயுஜ்ய முக்தி கிடைத்தல் இத்தலத்தின் மகிமையை விளக்கும் வரலாறு " ஆதிசைவ ருத்ரகோடி ஸம்ஹிந்தை' என்ற சிவபுராணத்தில் சாயுஜ்ய காண்டத்தில், முப்பத்தி மூன்று அத்தியாயங்களில் விவரிக்கப்பட்டுள்ளது. நைமிசாரணியத்தில், சனகாதி முனிவர்களுக்கு, சூத பௌராணிகர் நிகழ்ச்சிகளை விவரிப்பதாக அமைந்துள்ளது. அதைச் சுருக்கமாகக் காண்போம்.

க்ரத யுகத்தில், பன்னீராயிரம் ரிஷிகளும் (வாலகில்ய மற்றும் வைகானஸ் முனிவர்கள்), மூன்று கோடி மந்திர தேவதைகளும், "சாயுஜ்' முக்தி (ஞானமுக்தி) அடையும் பொருட்டு, வேங்கடகிரியில், திருவேங்கடமுடையான் (வெங்கடேசப் பெருமாள்) திருச்சன்னதியில், மந்திரங்களைக் கோஷித்துக் கொண்டிருந்தனர். அச்சமயம் அங்குவந்த "துர்வாச மகரிஷி' இவர்களின் நோக்கத்தை அறிந்து, பரிகசித்தார். பின் அவர்களைப் பார்த்து ""சாயுஜ்ய முக்தியை தவத்தாலோ அல்லது மந்திர சக்தியாலோ பெற முடியாது. ஞானத்தால் மட்டும் தான் பெறமுடியும் குருவிற்கு பணிவிடை செய்து, அவரது ஆசியைப் பெற்ற அத்யாத்ம வித்தையைப் பயின்று, பிரம்ம ஞானம் பெற்று, பின் பரமேஸ்வரனின் அனுக்கிரஹத்தால் மட்டும் தான் "ஞானமுக்தி' பெற முடியும் என்று கூறினார்.

இதைக் கேட்ட மந்திர தேவதைகளுக்கு கடும் கோபம் வந்தது. தங்கள் வலிமையைப்பழித்த துர்வாசரைத் தூற்றினர். ""முக்தியடைய எங்களுக்கு சக்தியில்லை என்கிறீர்களா? வெங்கடாஜலபதியை குறித்து தவம் செய்து, இக்கணமே தாங்கள் முக்தியடையவோம்'' என்று சூளுரைத்தனர். தம்மையும் பிரம்ம வித்தையையும் அவமதித்த மந்திர தேவதைகளை நீங்கள் பலப்பல ஜென்மங்கள் எடுத்து துன்பப்பட்டு இறுதியில்தான் முக்தி பெறுவீர்கள். அதுவும் இந்த ஷேத்திரத்தில் கிடைக்காது. வெங்கடேசப் பெருமாளும் அதை உங்களுக்கு அளிக்க முடியாது. என்று துர்வாசர் சபித்தார்.

துர்வாசருடைய கோபத்தைப் பொருட்படுத்தாத மந்திர தேவதைகள், தாங்கள் சபதம் செய்ததுபோல், திருமயிலையிலேயே தங்கி புஷ்கரணியில் ஸ்ரீ நாராயணனைத் குறித்து கடும் தவம் புரியத் தொடங்கினர். ஆனால் பன்னீராயிரம் ரிஷிகள், துர்வாசருடைய அறிவுரையை ஏற்று, அவரைப் பின் தொடர்ந்து காசிக்குச் சென்றனர். அங்கு மணிகர்ணிகையில் நீராடி, டுண்டிகணபதி, விஸ்வேஸ்வரர், விசாலாட்சி, பிந்துமாதவர் மற்றும் காலபைரவரை தரிசனம் செய்தனர். மகரிஷிகளுக்கு எதை உபதேசம் செய்வது என்று துர்வாசர் சிந்தித்துக் கொண்டிருக்கும் சமயம், ஸ்ரீ விஸ்வநாதரான வேத்ரவனேஸ்வரர் (திருக்கோடீஸ்வரர்) அவரது கனவில் தோன்றி, மகரிஷிகளுக்கு பஞ்சாட்சர மந்திரத்தை உபதேசம் செய்து "அத்யாத்ம' வித்தையை கற்றுத் தரும்படியும், ஒரு மாதம் காசியில் தங்கிவிட்டு பின் மகரிஷிகளுடன் வேத்ரவனத்திற்கு (திருக்கோடிக்கா) வரும்படியும் கட்டளையிடுகிறார்.

அவ்வாறே துர்வாசர் திருக்கோடிக்கா தலத்திற்கு வந்து சேர்ந்தார். பின் திருக்கோடீஸ்வரரின் ஆனைப்படி, மகரிஷிகளுக்கு சிருங்கோத்பவ தீர்த்தத்தில் ஸ்நானம் செய்வித்து, அத்தீர்த்தத்தை சிறிது கையில் எடுத்துக்கொண்டு, அவர்களுடன் முக்கோடி மந்திரமந்திரதேவதைகள் கடுந்தவம் புரியும் இடமான திருமயிலைக்கு வந்தார்.

அப்போது ஸ்ரீதிருக்கோடீஸ்வரர், அம்பாள் திரிபுரசுந்தரி மற்றும் இரு புத்திரர்கள், பரிவாரங்களுடன் வந்து திவ்யதரிசனம் கொடுத்தார். ஸ்வாமியின் முன்னிலையில் துர்வாசர் தன் கையில் கொண்டு வந்திருந்த, சிருங்கோத்பவ தீர்த்தத்தை, பன்னீராயிரம் ரிஷிகளுக்கும் தலையில் தெளிக்க, அப்போது ஓர் ஜோதி தோன்றி முனிவர்கள் யாவரும் அதில் ஐக்கியமானர்கள். அவர்களுக்கு ஞான முக்தி கிட்டிவிட்டது.

இதைக் கண்ணுற்ற மந்திரதேவதைகள், துர்வாசரைப் பார்த்து, ""உங்கள் முயற்சியாலோ, பரமேஸ்வரனின் அருளாலோ மகரிஷிகளுக்கு ஞானமுக்தி கிடைக்கவில்லை. அவர்களுடைய பூர்வ ஜென்ம கர்மபலன்களால் தான் அது கிட்டியது. நாங்கள் எப்படியாவது, ஸ்ரீ நாராயணனிடமிருந்தே சாயுஜ்ய முக்தியை பெருவோம் பாருங்கள்'' என்று சூளுரைத்தார்கள். மந்திரதேவதைகளின் கர்வம் இன்னும் அடங்கவில்லை என்பதைக் கண்ணுற்ற துர்வாசர் மிக்க கோபம் கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

சுவாமி புஷ்கரணியின் கரையில் தவமிருந்த திரிகோடி மந்திரதேவதைகளுக்கு பல இடையூறுகள் ஏற்படவே, அவை அங்கிருந்து புறப்பட்டு பத்ரிகாச்சரம், நைமிசாரணியம், துவாரகை, கோஷ்டிபுரம் முதலிய வைணவ தலங்களுக்குச் சென்று தங்கள் தவத்தைத் தொடர்ந்தனர். ஒவ்வொரு இடத்திலும் அவர்கள் முன் ஸ்ரீ நாராயணன் தோன்றி ""நீங்கள் துர்வாசரை விரோதித்துக்கொண்டு, அவரது கோபத்திற்கு ஆளானது மிகத்தவறு. என்னால் உங்களுக்கு சாயுஜ்ய முக்தி தர இயலாது. பரமசிவனால் மட்டும்தான் அது சாத்தியம். ஆகவே அவரை வழிபடுங்கள்'' எனக் கூறுகிறார்.

மாற்றமடைந்த முக்கோடி மந்திர தேவதைகள், அடுத்து என்ன செய்வது என்று புரியாமல், திகைத்து நின்றபோது நாரத முனிவர் தோன்றி ""பரமேஸ்வர பிரசாதத்தால் மட்டுமே ஞான முக்தி பெறமுடியும்.'' என வலியுறுத்துகிறார். துர்வாசர் போன்றே, இவரும் கூறியதைக்கேட்டு, கோபமடைந்த மந்திரதேவதைகள், நாரதரையும் இழிவாகப் பேசினர். நாரதர் அவர்களைப் பார்த்து நீங்கள் நூறு ஜென்மங்கள், மீண்டும் பிராம்மணர்களாகப் பிறந்து, கடைசி ஜென்மத்தில் ஸ்ரீ நாராயணனின் அனுக்கிரஹத்தால் முக்தி பெறுவீர்கள்'' என்று கூறி மறைந்து விடுகிறார். இதைக் கேட்டு ஓரளவு சமாதானம் அடைந்த மந்திரதேவதைகள் பிராம்மண வடிவம் ஏற்று, நூற்றெட்டு திவ்ய தேசங்களிலும், ஸ்ரீ நாராயணனைக்குறித்து, தவமிருந்து விட்டு, கடைசியாக, சுவேத தீவிற்கு வந்தனர். இவர்களது தீவிர தவத்தைக் கண்டு, என்ன செய்வது என்று புரியாத ஸ்ரீ நாராயணன், வீரபத்திரரிடம் செய்தியைக் கூறி, ஆலோசனை கேட்கிறார். வீரபத்திரர் அவரிடம் திருக்கோடிக்கா தலத்தின் மகிமையை எடுத்துக் கூறுகிறார்.

இந்த ஜகத்தில் பாவக ஷேத்திரம் ஒன்று உள்ளது. அதில் பிப்பல விருட்சம் (அரசமரம்) அதிக உத்தமமாக விளங்குகிறது. அங்கு ஸர்வேஸ்வரன், திருக்கோடீஸ்வரர் என்ற நாமதேயத்துடன் ஸ்ரீ திரிபுரசுந்தரி தேவியுடன், ஆவிர்பவித்து இருக்கிறார். அங்கே சிருங்கோத்பவ தீர்த்தம், சித்ர குப்த தீர்த்தம், யம தீர்த்தம், வருண தீர்த்தம், குபேரதீர்த்தம், அக்னி தீர்த்தம், துர்கா தீர்த்தம், பூத தீர்த்தம், காளி தீர்த்தம், நிர்நதி தீர்த்தம் என்ற மஹா தீர்த்தங்கள் உள்ளன. இங்கு பரமசிவனை ஆராதித்து, தர்ம, அர்த்த, காம, மோஷ என்கிற நான்கு புருஷார்த்த தேவதைகள் ஸித்தி பெற்றன. மேலும் ஸப்தரிஷிகளும், ஸனாகதி முனிவர்களும் மற்றும் அநேக மகான்களும் சித்தி பெற்றுள்ளார்கள். தவிர, ஜமதக்னி முனிவரின் புதல்வரான பரசுராமர், தன் தாயைக் கொன்றதால் ஏற்பட்ட மாத்ருஸத்தி தோஷம், ஸ்ரீ ராமருக்கு ஏற்பட்ட "பிரம்மஹத்தி' தோஷம், பிரலம்பாசுரனைக் கொன்றதால் பலராமனுக்கு நேர்ந்த பாவம், தட்சயாகத்தில் பலபேரைக் கொன்றதால் எனக்கும், காளிக்கும் ஏற்பட்ட "மஹா ஹத்யா பாபம்,' இவற்றிற்கெல்லாம், திருக்கோடிக்கா ஸ்தலத்தில்தான் பாப நிவர்த்தி கிடைத்தது.
Tags:    

Similar News