செய்திகள்
மழை (கோப்புப்படம்)

சென்னையில் அடுத்த வாரம் மீண்டும் மழைக்கு வாய்ப்பு- தனியார் வானிலை மையம் தகவல்

Published On 2019-11-09 05:04 GMT   |   Update On 2019-11-09 05:04 GMT
‘புல்புல்’ புயல் கரையை கடக்கும் போது சென்னையில் அடுத்த வாரம் மீண்டும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

வங்கக்கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுபெற்றது. ‘புல்புல்’ என்று பெயரிடப்பட்ட இந்த புயலால் தமிழகத்தில் பலத்த மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் வங்கக்கடலின் வடமேற்கு திசையில் ஒடிசா மற்றும் மேற்கு வங்காளம் நோக்கி நகர்ந்தது.

புல்புல் புயல் இன்று இரவு மேற்கு வங்காளம் மற்றும் வங்காள தேசம் இடையே கரையை கடக்கிறது. புயல் வேறு திசையை நோக்கி சென்றதால் சென்னையில் வறண்ட வானிலையை காணப்படுகிறது.

இந்த நிலையில் புல்புல் புயல் கரையை கடந்த பிறகு சென்னையில் அடுத்த வாரம் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மைய இயக்குனர் கூறும் போது,

புல்புல் புயல் வலுவிழந்து கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. மேக கூட்டங்கள் உருவாகுவதற்கான அறிகுறிகள் இருக்கின்றன.

இதனால் அடுத்த வாரம் 15 அல்லது 16-ந்தேதி சென்னையில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கிறோம். அதுவரை வானிலை வறண்டு காணப்படும் என்றார். ஸ்கைமெட், வானிலை மைய தலைவர் மகேஷ் பலவத் கூறும் போது,

புயல் கரையை கடந்த பிறகு காற்றின் திசை மீண்டும் மாறி தென்மேற்கு கடலோரம் நோக்கி நகரும். அதன் மூலம் வடமேற்கு திசையில் உருவாகும் காற்றழுத்தம் காரணமாக சென்னையில் மழை பெய்யும்.

ஆனால் இந்த மழை பெரிய அளவில் இருக்காது மிதமான மழையாகவே இருக்கலாம் என்றார்.
Tags:    

Similar News