செய்திகள்
பிரதமர் மோடி

கொரோனா தடுப்பூசி பணி: மாநில முதல்- மந்திரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை

Published On 2021-01-11 09:56 GMT   |   Update On 2021-01-11 09:56 GMT
நாடு முழுவதும் 16-ந் தேதி தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ள நிலையில் மாநில முதல்- மந்திரிகளுடன் பிரதமர் மோடி இன்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்துகிறார்.

சென்னை:

இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய கொரோனா தடுப்பூசிகளை பயன்படுத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 16-ந் தேதி தடுப்பூசி போடும் பணி தொடங்க இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்து மாநிலங்களிலும் விரிவாக செய்யப்பட்டு வருகின்றன.

இது சம்பந்தமாக ஏற்கனவே மாநில அரசு அதிகாரிகளுடன் மத்திய அரசு கடந்த சனிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டது. இதில் மத்திய அரசின் உயர் அதிகாரிகளும், மாநில அரசுகளின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

அதையடுத்து 16-ந் தேதி தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என்று அதிகாரப்பூர்வமாக பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டார்.

இந்த நிலையில் பிரதமர் மோடி, அனைத்து மாநில முதல்-மந்திரிகளுடனும் இது சம்பந்தமாக இன்று ஆலோசனை நடத்துகிறார்.

வீடியோ கான்பரன்ஸ் மூலமாக இன்று ஆலோசனை நடைபெற உள்ளது. மாலை 4 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் தொடங்குகிறது. அப்போது பிரதமர் மோடி, மாநில முதல்-மந்திரிகளின் கருத்துக்களை கேட்டு அறிகிறார். மேலும் மாநிலத்தில் உள்ள ஏற்பாடுகள் குறித்தும் அவர் விவரங்களை கேட்டறிய உள்ளார்.

இந்தியாவில் முதல் கட்டமாக 3 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளது. முதலில் சுகாதாரப் பணிகளில் இருக்கும் ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி போடப்படும். அதை தொடர்ந்து போலீசார் உள்ளிட்ட 2 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது.


இதன் பின்னர் தான் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படும். அதில் முதலில் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் ஏற்கனவே பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊசி போடப்படும். இந்த வகையில் 27 கோடி பேர் உள்ளனர்.

ஒவ்வொரு நபருக்கும் 2 தடவை குறிப்பிட்ட கால இடைவெளியில் ஊசி போடப்பட உள்ளது.

Tags:    

Similar News