செய்திகள்
கோப்புபடம்

3-வது அலை தாக்காது: கொரோனா 6 மாதங்களில் கட்டுக்குள் வர வாய்ப்பு - தேசிய நோய் தடுப்பு மையம்

Published On 2021-09-16 08:32 GMT   |   Update On 2021-09-16 11:54 GMT
தடுப்பூசி செலுத்திக்கொள்வது தான் கொரோனா வைரசுக்கு எதிரான மிகப்பெரிய பாதுகாப்பு என தேசிய நோய் கட்டுப்பாட்டு மைய இயக்குனர் சுஜித்சிங் கூறியுள்ளார்.

புதுடெல்லி:

கொரோனா தொற்று இந்தியாவில் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் பரவத் தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். உயிரிழப்பும் அதிகமாக இருந்தது. அதன்பின் சுமார் 5 மாதங்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியது.

இதையடுத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பும் சூழல் ஏற்பட்டது. ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் கொரோனா 2-வது அலை தாக்கியது. இதில் ஒரு நாளைக்கு 4 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டனர்.

இதையடுத்து தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டன. மேலும் தடுப்பூசி செலுத்தும் பணி வேகப்படுத்தப்பட்டது. தற்போது கொரோனா தொற்று பாதிப்பு பெரும் அளவில் குறைந்துள்ளது.

அதிகமாக பாதிக்கப்பட்டு இருந்த கேரள மாநிலத்திலும் தற்போது தினசரி பாதிப்பு குறைந்துள்ளது. இதற்கிடையே இந்தியாவில் கொரோனா 3-வது அலை தாக்கலாம் என்று நிபுணர்கள் எச்சரித்து வருகிறார்கள்.

மேலும் உருமாறிய கொரோனாவால் பாதிப்புகள் அதிகரிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். இதையடுத்து கொரோனா தொற்று மீண்டும் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மக்களிடம் தடுப்பூசியை விரைவாக செலுத்துமாறு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 75 கோடி டோஸ்க்கு மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா தொற்று அடுத்த 6 மாதங்களில் கட்டுக்குள் வர வாய்ப்பு உள்ளதாக சுகாதார நிபுணர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தேசிய நோய் கட்டுப்பாட்டு மைய இயக்குனர் சுஜித்சிங் கூறியதாவது:-

இந்த கொரோனா பெரும் தொற்று எங்களின் பெரும்பாலான கணிப்புகளை மீறி உள்ளது. ஆனாலும் அடுத்த 6 மாதங்களில் நாம் நோயை கட்டுக்குள் கொண்டு வரும் நிலையை நோக்கி செல்வோம். இறப்பு மற்றும் நோயுற்ற தன்மை கட்டுப்பாட்டில் இருந்தால் நாம் நோயை நிர்வகிக்க முடியும்.

75 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி செயல்திறன் 70 சதவீதம் என்றால் இந்தியாவில் 50 கோடி மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்துள்ளது.

ஒரு டோஸ் 30 முதல் 31 சதவீதம் வரை நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது. ஒரு டோஸ் செலுத்திக் கொண்ட 30 கோடி பேர் 31 சதவீதம் வரை நோய் எதிர்ப்பு சக்தியை பெற்று இருக்கிறார்கள்.

தடுப்பூசி போட்ட பிறகும் மக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் 20 முதல் 30 சதவீதம் பேருக்கு பாதிப்பு ஏற்படுகிறது.


தடுப்பூசி செலுத்திக்கொள்வது தான் கொரோனா வைரசுக்கு எதிரான மிகப்பெரிய பாதுகாப்பு. பெரும்பாலானோர் ஒரு நோய்க்கு எதிராக எதிர்ப்பு சக்தியை பெறும்போது அந்த நோய் பரவுவது குறையத் தொடங்கி விடும்.

தற்போது கொரோனா தொற்று கட்டுக்குள் வர வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால் பாதிப்பை நிர்வகிப்பதையும் சுகாதார உள்கட்டமைப்புகளையும் எளிதாக்கும்.

இந்தியாவில் கொரோனா புதிய மாறுபாடு இல்லை. தற்போது உருவாகி உள்ள சி-1.2 மற்றும் எம்.யூ. ஆகிய உருமாறிய கொரோனா நாட்டில் காணப்படவில்லை. புதிய வைரஸ் மாறுபாடுகள் 3-வது அலையை நாட்டில் ஏற்படுத்தாது.

இது ஆண்டிபாடிகள் மற்றும் மக்கள் நடந்து கொள்ளும் விதத்தை பொறுத்து அமையும். தற்போது பண்டிகை காலங்கள் வர இருப்பதால் சற்று கவலை ஏற்பட்டு இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இதையும் படியுங்கள்...இந்த நாளை ஒருபோதும் நான் மறக்கமாட்டேன்: ராபின் உத்தப்பா

Tags:    

Similar News