செய்திகள்
ஜிப்மர் மருத்துவமனை

கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்காக ஜிப்மரில் கூடுதல் படுக்கை வசதிகள்- கோகுலகிருஷ்ணன் எம்பி தகவல்

Published On 2021-04-30 09:34 GMT   |   Update On 2021-04-30 09:34 GMT
புதுவை அரசு முன்பு இருந்தது போலவே தனியார் மருத்துவமனைகளையும் கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்த தொடங்கியிருப்பது வரவேற்கத்தக்கது.

புதுச்சேரி:

புதுவை மேல்-சபை எம்.பி. கோகுலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா பெரும் தொற்றின் 2-வது அலை புதுவையில் மக்களையும், அரசையும் பாடாய்படுத்தி வருகிறது.

இந்த சூழ்நிலையில் மாநில அரசின் பல்வேறு துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதுடன் மத்திய அரசின் நிறுவனமான ஜிப்மர் மருத்துவமனையும் இணைந்து செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

புதுவை அரசு முன்பு இருந்தது போலவே தனியார் மருத்துவமனைகளையும் கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்த தொடங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. இதற்கு ஈடாக ஜிப்மர் நிர்வாகமும் தனது படுக்கைகளின் எண்ணிக்கையை 800 ஆக அதிகரிக்க வேண்டும் என்று நிர்வாகத்தை வற்புறுத்தி இருக்கிறேன்.


மாநில அரசுடன் செய்து கொண்ட புரிதலின்படி ஜிப்மர் நிர்வாகம் அதிதீவிரமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்ற நிலை இருப்பதால் தான் அங்கு அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்று ஜிப்மர் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

இருந்தாலும் புதுவையில் மருத்துவ சிகிச்சை அளிப்பதில் தலையாய நிறுவனம் என்ற முறையிலும் மத்திய அரசின் நிறுவனமாக இருப்பதாலும் அதற்கு கூடுதல் பொறுப்பு உள்ளது என்பதை நான் சுட்டிக்காட்டி இருக்கிறேன்.

அதற்கேற்ப அங்கு 10 ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் தயாரிக்கும் புதிய பிரிவு ஒன்றை ஏற்படுத்தி வருகிறார்கள். கூடுதலாக புதிய படுக்கைகளையும் ஒதுக்குவதாக உறுதி அளித்து உள்ளார்கள்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News