செய்திகள்
கைது

ஜவுளிக்கடை பெண் உரிமையாளரை தாக்கிய காவலாளி கைது

Published On 2021-10-08 10:12 GMT   |   Update On 2021-10-08 10:12 GMT
முன்விரோதம் காரணமாக ஜவுளிக்கடை பெண் உரிமையாளரை தாக்கிய காவலாளியை போலீசார் கைது செய்தனர்.
மதுரை:

மதுரை விளக்குத்தூண் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ்மால் மனைவி சங்கீதா (வயது 48). இவர் கொத்தவால் சாவடி சந்து பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார்.

சங்கீதா நேற்று வீட்டில் இருந்து கடைக்கு புறப்பட்டு வந்தார். அவரை வாலிபர் வழிமறித்து தகராறில் ஈடுபட்டார். இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது. இதில் சங்கீதாவுக்கு அடி உதை விழுந்தது. இது குறித்து அவர் விளக்குத்தூண் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் லிங்கபாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

அப்போது சங்கீதா, எனக்கும் அதே பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வரும் முகமது அசாருக்கும் இடையே தொழில் போட்டி காரணமாக முன் விரோதம் உள்ளது. அவரது தூண்டுதலின் பேரில் என் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கலாம் என்று தெரிவித்தார்.

கொத்தவால் சாவடி பகுதியில் சங்கீதாவை வாலிபர் தாக்கும் வீடியோ காட்சிகள், அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. போலீசார் அதில் உள்ள காட்சிப் பதிவுகளை ஆய்வு செய்தனர்.

அப்போது சங்கீதாவை தாக்கியது, முகமது அசார் ஜவுளி கடையில் வேலை பார்க்கும் வாட்ச்மேன் ராமலிங்கம் என்பது தெரியவந்தது. போலீசார் ஜவுளிக்கடை பெண் உரிமையாளரை தாக்கிய வாட்ச்மேன் ராமலிங்கத்தை கைது செய்தனர்.
Tags:    

Similar News