செய்திகள்
அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் சுகாதாரத்துறை பணியாளர்கள் கிருமிநாசினி தெளித்தபோது எடுத்த படம்.

கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2 மாணவர்கள், ஆசிரியைக்கு கொரோனா

Published On 2021-09-08 09:53 GMT   |   Update On 2021-09-08 09:53 GMT
கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2 மாணவர்களுக்கும், ஒரு ஆசிரியைக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
நெல்லிக்குப்பம்:

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே மேல்பட்டாம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் 14 வயது மாணவர். அதே ஊரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 1-ந்தேதி முதல் 3-ந்தேதி வரை பள்ளிக்கு சென்று வந்த மாணவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து அந்த மாணவருக்கு கடந்த 4-ந்தேதி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் மாணவர் பரிசோதனை முடிவுக்காக தன்னை தானே வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டிருந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை பரிசோதனை முடிவு வௌியானதில், அந்த மாணவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அந்த மாணவர் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.

இதற்கிடையே இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் வட்டார மருத்துவ அலுவலர் பிரபு தலைமையில் சுகாதார அலுவலர் ரமேஷ் மற்றும் சுகாதார பணியாளர்கள், மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி ஊழியர்கள் நேற்று பள்ளி வளாகத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் பள்ளி முழுவதும் கிருமிநாசினி தெளித்து, சுத்தம் செய்தனர். மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவா் அமர்ந்திருந்த வகுப்பறை உடனடியாக மூடப்பட்டது.

தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர் மற்றும் அவருடன் வகுப்பறையில் அமர்ந்திருந்த 14 மாணவர்களையும் கொரொனா பரிசோதனை செய்து தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தினர்.

இதுவரை கடலூர் மாவட்டத்தில் 4 ஆசிரியருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் அரசு பள்ளி மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதே போல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரு ஆசிரியை, ஒரு மாணவிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதன் விவரம் வருமாறு:-

கள்ளக்குறிச்சி அருகே வரதப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி, பெரியசிறுவத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு நேற்று முன்தினம் லேசான காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருகு்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட கல்வி அலுவலர் கார்த்திகா பெரிய சிறுவத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அனைத்து வகுப்பறைகளிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மேலும் அந்த மாணவியுடன் தொடர்பில் இருந்த மாணவ, மாணவிகள் 50 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதேபோல் சின்னசேலம் அருகே உள்ள அம்மையகரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தி வரும் பட்டதாரி ஆசிரியை ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். இதனைத் தொடர்ந்து அந்த ஆசிரியையுடன் பணிபுரிந்து வரும் 10 ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும் பள்ளி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

Tags:    

Similar News