செய்திகள்
வெங்காயம்

பெரம்பலூர் அருகே வயலில் விதைக்க வைத்திருந்த 300 கிலோ வெங்காயம் திருட்டு

Published On 2019-12-04 05:23 GMT   |   Update On 2019-12-04 06:08 GMT
பெரம்பலூர் அருகே வயலில் விதைக்க வைத்திருந்த 300 கிலோ வெங்காயம் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பலூர்:

சமையலுக்கு அத்தியாவசியமான பொருளில் ஒன்றான சின்ன வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் ஏறிக் கொண்டே செல்கிறது. சில்லரையாக ஒரு கிலோ ரூ.150 வரை வெங்காயம் விற்கப்படுகிறது. இதை பயன்படுத்தி வியாபாரிகள் சிலர் வெங்காயத்தை பதுக்கி வைத்தும் விற்பனை செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் வெங்காயத்தை திருடும் சம்பவம் பல இடங்களில் நடந்து வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்திலும் வெங்காயம் திருடப்பட்ட சம்பவத்தால் விவசாயிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் அருகே உள்ள கூத்தனுர் கிராமத்தை சேர்ந்தவர் முத்து கிருஷ்ணன், விவசாயி. இவர் தனது நிலத்தில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்து வருகிறார். கூத்தனூரில் இருந்து ஆலத்தூர் கேட் செல்லும் சாலையில் உள்ள அவரது விவசாய நிலத்தில் சின்ன வெங்காயம் விதைப்பதற்காக 300 கிலோ மூட்டையாக கட்டி வைத்திருந்தார். அதனை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.

இதுகுறித்து முத்துகிருஷ்ணன் பாடாலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சின்ன வெங்காயத்தை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ.150 வரை விற்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் வெங்காயத்தை விவசாய நிலத்தில் வைத்திருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் அதிக அளவில் வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு சாகுபடி செய்யப்படும் வெங்காயம் திருச்சி காந்தி மார்க்கெட் மற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் வெங்காயம் உற்பத்தி பாதிக்கப்படும் நேரங்களில் பெரம்பலூர் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் வெங்காயத்தை வியாபாரிகள் பயன்படுத்தி வந்தனர். இதனால் வரத்து குறைவான காலங்களில் பெரம்பலூர் வெங்காயம் கைகொடுத்து வருகிறது.

தற்போது மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் மழையால் வெங்காயத்தின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளதால் திருச்சி காந்தி மார்க்கெட்டிற்கு வெங்காயம் வரத்து குறைந்து கடந்த ஒரு மாதமாக வெங்காயத்தின் விலை இல்லத்தரசிகளின் கண்களில் கண்ணீரை வரவழைக்கும் வகையில் உயர்ந்துள்ளது.

பெரம்பலூர் வெங்காயமாவது கைக்கொடுக்கும் என்று பார்த்தால் அதுவும் கைகொடுக்கவில்லை. பெரம்பலூர் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்ட வெங்காயங்களும் மழையால் அழுகி நாசமாகி விட்டன. அழுகிப்போன வெங்காயங்களை தற்போது விவசாயிகள் அறுவடை செய்து வருகின்றனர். இதனால் திருச்சியில் வெங்காயத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது. இதை பயன்படுத்தியே மர்ம நபர்கள் வெங்காய திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News