விளையாட்டு
சரண்ஜித் சிங்

ஹாக்கி ஜாம்பவான் சரண்ஜித் சிங் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்

Published On 2022-01-27 16:23 GMT   |   Update On 2022-01-27 16:23 GMT
சரண்ஜித் சிங்கின் மறைவுக்கு பிரதமர் மோடி, விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் மற்றும் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி:

இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் சரண்ஜித் சிங் (வயது 90), இமாச்சலபிரதேசம் உனாவில் உள்ள தனது வீட்டில் காலமானார். நீண்டகாலமாக உடல்நலக்குறைவு, வயது முதிர்வு சார்ந்த நோயால் பாதிக்கப்பட்டிருந்த சரண்ஜித் சிங்கிற்கு இன்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து அவர் உயிர் பிரிந்தது. 

இமாச்சலபிரதேச மாநில உனா மாவட்டத்தில் சரண்ஜித் சிங் பிறந்தார். 1964-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றது. தங்கம் வென்ற இந்திய அணியின் கேப்டனாக சரண்ஜித் சிங் செயல்பட்டார். அதேபோல், 1960-ம் ஆண்டு நடைபெற்ற ரோம் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற இந்திய அணியிலும் சரண்ஜித் சிங் இடம்பெற்றிருந்தார்.

ஹாக்கியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு சரண்ஜித் சிங் சிம்லாவில் உள்ள இமாச்சல பிரதேச பல்கலைக்கழகத்தில் உடற்கல்வித்துறையின் இயக்குநராக பணியாற்றியுள்ளார். விளையாட்டுத் துறையில் அவரது பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் அவருக்கு பத்ம ஸ்ரீ மற்றும் அர்ஜூனா விருது வழங்கப்பட்டது.

சரண்ஜித் சிங்கின் மறைவுக்கு பிரதமர் மோடி, விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் மற்றும் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். சரண்ஜித் சிங்கின் மறைவு வருத்தமளிப்பதாக  பிரதமர் மோடி தனது இரங்கல் செய்தியில் கூறி உள்ளார். இந்திய ஹாக்கி அணியின் வெற்றிகளில் முக்கிய பங்கு வகித்த அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் தினது இரங்கலை தெரிவிப்பதாக பிரதமர் கூறி உள்ளார்.
Tags:    

Similar News