செய்திகள்

கிருஷ்ணசாமி வாபஸ் பெற்றதால் ஒட்டப்பிடாரம் தேர்தல் வழக்கு தள்ளுபடி

Published On 2019-03-19 10:29 GMT   |   Update On 2019-03-19 10:29 GMT
ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் செல்லாது என தொடரப்பட்ட வழக்கை டாக்டர் கிருஷ்ணசாமி வாபஸ் வாங்குவதாக தெரிவித்ததையடுத்து, வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. #OttapidaramCase #HC #Krishnasamy
சென்னை:

பாராளுமன்றத் தேர்தலுடன் தமிழ்நாட்டில் காலியாக உள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறாது என்று தேர்தல் கமி‌ஷன் விளக்கம் அளித்தது.

வழக்குகள் வாபஸ் பெறப்பட்டு விட்டால் அந்த 3 தொகுதிகளிலும் இடைத் தேர்தலை நடத்திவிடலாம் என்றும் தலைமை தேர்தல் அதிகாரி கூறினார். எனவே, மூன்று தொகுதிகளிலும் நிலுவையில் உள்ள வழக்குகளை திரும்பப் பெறும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.

ஒட்டப்பிடாரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சுந்தர்ராஜன் வெற்றியை எதிர்த்து, புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருந்ததால் அந்த தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், ஒட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிட்ட புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி இன்று உயர் நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றைத்தாக்கல் செய்தார். அதில் ஒட்டப்பிடாரம் தொகுதியில் தேர்தல் செல்லாது என தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற அனுமதிக்க வேண்டும் என கூறியிருந்தார். வழக்கை ரத்து செய்து தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் தனது மனுவில் கூறியிருந்தார்.



கிருஷ்ணசாமியின் கோரிக்கையை ஏற்ற நீதிபதி, ஒட்டப்பிடாரம் தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். தேர்தல் தொடர்பான வழக்கு எதுவும் இல்லாததால் தேர்தல் ஆணையம் அதன் நடைமுறைப்படி முடிவெடுக்கலாம் எனவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார். #OttapidaramCase #HC #Krishnasamy
Tags:    

Similar News