செய்திகள்

டெல்லியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியுடன் நடிகர் கமல்ஹாசன் சந்திப்பு

Published On 2018-06-21 06:39 GMT   |   Update On 2018-06-21 06:39 GMT
டெல்லியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை நேரில் சந்தித்து பேசிய நடிகர் கமல்ஹாசன் தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலை குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிவித்தார். #KamalHassan #SoniaGandhi
புதுடெல்லி:

நடிகர் கமல்ஹாசன் பிப்ரவரி மாதம் 21-ம் தேதி மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சியைத் தொடங்கினார். மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் பெயர், கொடி ஆகியவற்றை அறிவித்தார். அதன்பின்னர் தனது கட்சியை முறைப்படி பதிவு செய்வதற்காக டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்திருந்தார்.

அதன்படி, கமல்ஹாசனின் புதுக்கட்சி குறித்து ஆட்சேபம் தெரிவிக்க தேர்தல் ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. ஆனால் இது குறித்து எந்தவித ஆட்சேபமும் தெரிவிக்கப்படவில்லை.


இதற்கிடையே, தேர்தல் ஆணைய அழைப்பை ஏற்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கட்சி  நிர்வாகிகளுடன் நேற்று டெல்லி சென்று தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்தார். அப்போது கட்சிக்கு அங்கீகாரம் பெறுவது தொடர்பாக மனு அளித்தார்.

அதன்பின்னர், கமல்ஹாசன் டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்தார். தமிழகத்தில் உள்ள அரசியல் சூழல் குறித்து இருவரும் விவாதித்ததாக ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், இருவரின் சந்திப்பு குறித்து கமல்ஹாசன் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து, இன்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து பேசினார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய கமல், 'நேற்று ராகுல்காந்தியை சந்தித்து பேசியதை தொடர்ந்து இன்று மரியாதை நிமித்தமாக சோனியா காந்தியை சந்தித்து பேசினேன். சந்திப்பின் போது தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலை குறித்து சோனியா காந்தியுடன் ஆலோசனை நடத்தினேன். தேர்தல் கூட்டணி குறித்து சோனியா காந்தியுடன் எதுவும் பேசவில்லை' என கூறினார். #KamalHassan  #SoniaGandhi

Tags:    

Similar News