ஆன்மிகம்
மதுரை சித்திரை திருவிழா

மதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்களை அனுமதிக்க உத்தரவிட முடியாது: நீதிபதிகள் திட்டவட்டம்

Published On 2021-04-17 02:22 GMT   |   Update On 2021-04-17 02:22 GMT
பொது நலன் கருதிதான் திருவிழாக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்து உள்ளது. எனவே திருவிழாவின் போது பக்தர்களை அனுமதிக்குமாறு உத்தரவு பிறப்பிக்க இயலாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மதுரை :

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த வக்கீல் மணிகண்டன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உலகப்பிரசித்தி பெற்றது. மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலில் பாரம்பரியமாக நடைபெறும் சித்திரை திருவிழா நடந்து வருகிறது. கொரோனா பரவல் காரணமாக மதுரை சித்திரை திருவிழாவை காண பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. எனவே கோவிலுக்குள் ஆடி வீதியில் நடத்தப்படும் சுவாமி வீதி உலா நிகழ்ச்சியை கோவிலுக்கு வெளியே உள்ள சித்திரை வீதியில் நடத்த உத்தரவிட வேண்டும். கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்துக்கான ஏற்பாடுகளை செய்யவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில், “இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள் பிறப்பித்த உத்தரவுகளின் அடிப்படையில் சித்திரை திருவிழாவின்போது உரிய வழிமுறைகள் வகுக்கப்பட்டு உள்ளன. எனவே இந்த விவகாரத்தில் கோர்ட்டு தலையிட விரும்பவில்லை. பொது நலன் கருதிதான் திருவிழாக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்து உள்ளது. எனவே திருவிழாவின் போது பக்தர்களை அனுமதிக்குமாறு உத்தரவு பிறப்பிக்க இயலாது’’ என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Tags:    

Similar News