உள்ளூர் செய்திகள்
கைது

மேலப்பாளையத்தில் போலீஸ் ஜீப் மீது கல்வீசி தாக்கிய 4 பேர் கைது

Published On 2022-01-20 04:20 GMT   |   Update On 2022-01-20 04:20 GMT
மேலப்பாளையத்தில் போலீஸ் ஜீப் மீது கல்வீசி தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை:

நெல்லை மேலப்பாளையத்தில் உள்ள அழகிரிபுரம் பகுதியில் நேற்று இரவு 2 தரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவரையொருவர் அடித்து தாக்கினார்கள்.

இதுதொடர்பாக அழகிரி புரத்தை சேர்ந்த சிலர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையில் போலீஸ் ரோந்து வாகனம் சென்றது. அப்போது அழகிரிபுரத்தை சேர்ந்த சிலர், ‘எங்கள் பகுதிக்குள் எப்படி போலீஸ் வாகனம் வரலாம்’ என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு கூடியிருந்த கூட்டத்தில் இருந்து சிலர், போலீஸ் வாகனம் மீது கல்வீசி தாக்கினார்கள். இதில் போலீஸ் ஜீப் கண்ணாடி உடைந்தது. அதிர்ஷ்டவசமாக போலீசார் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதைத்தொடர்ந்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல், போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு மேலப் பாளையம் இன்ஸ்பெக்டர் முத்து சுப்பிரமணியம் தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர். போலீஸ் வாகனம் மீது கல்வீசி தாக்கிய சிலரை போலீசார் பிடித்தனர்.

இதற்கு அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து போலீசார் பிடித்து சென்ற 4 பேரை விடுவித்தனர்.

போலீஸ் வாகனம் மீது கல்வீசி தாக்கியவர்கள் குறித்து தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் கல்வீசி தாக்கியது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அழகிரிபுரத்தை சேர்ந்த முருகேசன் (26), ஆனந்தராஜ் (24), ராம்குமார்(20), ராஜ்(22) ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News