ஆன்மிகம்
இஸ்லாம் வழிபாடு

கடன் கொடுத்தவரிடம் கனிவாக நடந்து கொள்ளுங்கள்

Published On 2020-09-22 03:22 GMT   |   Update On 2020-09-22 03:22 GMT
நபி பெருமான் தனக்கு வந்த சோதனையை, வேதனையை தாங்கினாலும் “கடன் கொடுத்தவரிடம் கனிவாக நடந்துகொள்ளுங்கள். கடனைத் திருப்பித் தர முடியாத ஒரு நிலை இருக்குமேயானால் அதனை மன்னித்து விட்டுவிடுங்கள்.
ஒரு முறை அண்ணல் எம்பெருமானார் (ஸல்) அவர்கள், சுயதேவை கருதி தன் யூத நண்பர் ஸஹான் என்பவரிடம் கடன் வாங்கி இருந்தார்கள். கடன் உடன்படிக்கையும் எழுதப்பட்டது. ‘இன்றிலிருந்து மூன்று மாத கால தவணையில் கடன் தொகை திருப்பி செலுத்தப்பட வேண்டும்’ என்று ஒப்பந்தம் முடிவானது.

ஆனால் கடன் கொடுத்த சில நாட்களிலேயே ஸஹான், அண்ணலாரிடம் வந்து “என் கடன் தொகையை உடனே திருப்பித்தாருங்கள்” என்று வற்புறுத்தினார்.

“இன்னும் கால அவகாசம் இருக்கிறதே” என்று நபிகள் நாயகம் கேட்டதற்கு, “இல்லை, எனக்கு உடனே வேண்டும்” என்றதோடு, தன் கையில் இருந்த துண்டால் நபிகளாரின் கழுத்தை இறுக்கினார்.

அருகில் நின்றிருந்த உமர் கத்தாப் (ரலி) அவர்கள், அவரை அடிப்பதற்காக கையை ஓங்கினார்கள். உடனே கண்மணி நாயகம் அவர்களைத் தடுத்து “அவர் கடன் கொடுத்தவர். அவருக்கு அதனை திருப்பி வாங்குவதில் எல்லா உரிமைகளும் உண்டு” என்றார்கள்.

இந்த நிகழ்வைப் பற்றி கேள்விப்பட்ட அப்துல் ரஹ்மான் ஆவ்ஃப் (ரலி) அவர்கள் ஓடோடி வந்து, நபி பெருமானுக்கு உதவிக்கரம் நீட்டினார்கள்.

அப்போது நபிகளார், “ஆவ்ஃபே! அவர் ஏதோ ஒரு சிரமத்தில் இருக்கிறார். அதனால்தான் கெடு முடிவதற்கு முன்பாகவே என்னை நெருக்குகிறார். எனவே நான் வாங்கியதை விட சற்று அதிகமாகவே அளந்து கொடுங்கள்” என்றார்கள்.

இந்த வார்தையை கேட்ட மாத்திரத்தில் ஸஹான் என்ற யூத நண்பர் கண்மணி நாயகத்தின் கைகளைப் பற்றி “லாயிலாஹா இல்லல்லாஹ் முஹம்மதற் ரஸூலுல்லாஹ்” என்ற கலிமாவைச் சொல்லி இஸ்லாத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்கள்.

ஸஹான், தனது இந்த வினோதமான செயல்பாடுகளைப் பற்றி இவ்வாறு கூறினார்:-

“நான் தவ்ராத் வேதத்தை கற்றுத்தேர்ந்தவன். அந்த வேதத்தில், முகம்மது நபியவர்களின் அடையாளங்கள் பற்றி மிகத்தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்களோடு பழகிய இத்தனைக் காலங்களில் அவர்களின் பல அடையாளங்கள் ஒத்துப்போவதை அறிந்து கொண்டேன். ஆனால் ஒரே ஒரு குணாதிசயத்தை மட்டும் தெரிந்து கொள்வதற்கு பல காலங்கள் காத்திருந்தும் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. எனவே நானே நபிகள் நாயகத்திடம் சற்று கடுமையாக நடந்து, எப்படி அதை அவர்கள் எதிர்கொள்கிறார்கள் என்பதை அறிய நாடினேன். எங்கள் வேதத்தில் குறிப்பிட்டது போல் கடுமையாய் நடந்த என்னிடம் கருணையைக் காட்டினார்கள். எதிர்க்க வந்த உமரைத் தடுத்து நீதி செலுத்தினார்கள். நான் கொடுத்ததற்கு மேல் அள்ளித்தந்தார்கள். இந்த அரிய அடையாளத்தை உண்மைப்படுத்தியதும், ‘இவர்தான் உண்மையான இறைத்தூதர்’ என்று அறிந்துகொண்டேன். எங்கள் வேதத்தில் சொன்ன அத்தனை அடையாளங்களும் ஒத்துப்போனதால் நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன்”.

இவ்வாறு அவர் தனது மனமாற்றத்திற்கு விளக்கம் அளித்தார்.

நபி பெருமான் தனக்கு வந்த சோதனையை, வேதனையை தாங்கினாலும் “கடன் கொடுத்தவரிடம் கனிவாக நடந்துகொள்ளுங்கள். கடனைத் திருப்பித் தர முடியாத ஒரு நிலை இருக்குமேயானால் அதனை மன்னித்து விட்டுவிடுங்கள். அதனையே அல்லாஹ் விரும்புகிறான். அதற்கு பல மடங்கு அதிகமான நற்கூலியை வழங்குகிறான்” என்றார்கள்.

நபிகளாரின் போதனையை ஏற்று நடப்போம்.. நன்மைகளை அதிகமாக பெற்றுக்கொள்வோம்.

எம்.எச்.எம்.முஹம்மது முஹைதீன்.
Tags:    

Similar News