ஆன்மிகம்
அம்மனிடம் இருந்து வேல் வாங்கிய பின்பு முருகனுக்கு வியர்வை சிந்திய கண்கொள்ளாக்காட்சியை படத்தில் காணலாம்.

சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் அம்மனிடம் இருந்து வேல் வாங்கிய பின்பு முருகனுக்கு வியர்வை சிந்திய காட்சி

Published On 2020-11-20 06:39 GMT   |   Update On 2020-11-20 07:36 GMT
சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் வேல்நெடுங்கண்ணி அம்மனிடம் இருந்து முருகன் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதை காண பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
நாகை மாவட்டம் சிக்கலில் சிங்காரவேலவர் கோவில் உள்ளது. பிரசித்திப்பெற்ற முருகன் கோவில்களில் இக்கோவிலும் ஒன்று. முருகப்பெருமான் சிக்கலில் வேல்வாங்கி திருச்செந்தூரில் சூரனை வதம் செய்ததாக கந்த புராணம் கூறுகிறது. ஆகவே இக்கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா விமரிசையாக நடைபெறும்.

இதையொட்டி முருகன், வேல்நெடுங்கண்ணி அம்மனிடம் இருந்து வேல் வாங்கும் நிகழ்ச்சி கோவிலில் நடைபெறும். அப்போது முருகனின் முகத்தில் வியர்வை துளிகள் தோன்றுவது வியக்கத்தக்க நிகழ்வாகும். இதை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வார்கள்.

வழக்கம்போல் இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா கடந்த 15-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் ஒரு பகுதியாக நேற்று தேரோட்டம் நடந்தது. இதையொட்டி முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. இதையடுத்து முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் தேரில் எழுந்தருளினார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கோவிலின் உள்பிரகாரத்திலேயே தேரோட்டம் நடந்தது.

பின்னர் திருக்கார்த்திகை மண்டபத்தில் முருகன் எழுந்தருளினார். இதை தொடர்ந்து சாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவு 7.50 மணிக்கு வேல்நெடுங்கண்ணி அம்மனிடம் இருந்து முருகன் சக்திவேல் வாங்கினார். பிறகு முருகன் வியர்வை சிந்தும் காட்சி நடைபெற்றது. கொரோனா பரவலை தடுக்க பக்தர்களை சக்திவேல் வாங்கும் காட்சியை பார்க்க அனுமதிக்க வில்லை. இதில் நாகை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராணி, கோவில் நிர்வாக அதிகாரி அமநாதன் மற்றும் கோவில் பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News